சென்னை:ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும், கருக்கா வினோத்திற்கு அரசியல் தொடர்பு ஏதேனும் உள்ளதா? என போலீசார் விசாரணை திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆளுநர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், கருக்கா வினோத்தை போலீசார் காவலில் எடுக்க போலீசார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று (அக்.27) மனு தாக்கல் செய்துள்ளனர். ஆளுநர் மாளிகைக்கு முன்பு பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத்தை போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.
ஆளுநர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் மற்றும் சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர்மற்றும் சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி அருண் ஆகியோர் கூட்டாக இணைந்து செய்தியாளர் சந்தித்தனர். அதில், ஆளுநர் மாளிகையில் இருந்து கொடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என காணொளி ஆதாரங்களுடன் விளக்கினர்.
மேலும் கருக்கா வினோத்தை காவலில் எடுத்து முழு விசாரணை செய்தால்தான் அவரின் பின்னணி முழு விவரங்களும் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் நடந்தவுடன் அங்கிருந்த காவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். மேலும், கருக்கா வினோத் குற்ற பின்னணி உடையவர் என்பதும் இவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதாகவும்; அந்த வழக்குகளை போலீசார் முறையாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து நீதிமன்றத்தில் பதிவிட்டுள்ளதாகவும், பின்னர் அவர் சிறையிலும் அடைக்கப்பட்டர் எனவும் கூறினர்.
இந்த நிலையில், கருக்கா வினோத் ஜாமீனில் தான் வெளியே வந்துள்ளார். அவர் வெளியே வந்தப் பிறகு, யாரையெல்லாம் சந்தித்தார், அவருடன் வேறு யாராவது தொடர்பில் உள்ளனரா? அரசியல் ரீதியான தொடர்பு ஏதாவது இவருக்கு இருக்கிறதா? என்பன உள்ளிட்டவற்றை விசாரணை நடத்தியதன் பிறகுதான் உண்மையை கண்டறிய முடியும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதன் அடிப்படையில், கருக்கா வினோத்தை காவலில் எடுத்து விசாரணை செய்வதற்காக கிண்டி போலீசார், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து உள்ளனர். மேலும் இது தொடர்பான வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு வர இருப்பதால் அன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க:பெட்ரோல் குண்டு வீச்சு: ஆளுநர் மாளிகை குற்றச்சாட்டுக்கு சிசிடிவி காட்சிகளுடன் டிஜிபி விளக்கம்!