சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கான வயது வரம்பு 62 என உள்ள போது 61 வயதான சைலேந்திரபாபுவை நியமனம் செய்ய முடியாது எனவும், உறுப்பினர் சிவக்குமார் என்பவர் மீது ஏற்கனவே குற்றச்சாட்டிற்கு துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு, நிலுவையில் உள்ள நிலையில், அவர் போன்றவர்களை நியமனம் செய்தால் எப்படி நேர்மையாக நியமனம் நடைபெறும் எனக் கேள்வி எழுப்பி அரசின் கோப்பை 2வது முறையாக மீண்டும் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவியில் 62 வயது வரையில் மட்டுமே இருக்க முடியும். ஆனால், சைலேந்திரபாபுவிற்கு தற்பொழுது 61 வயதாகிறது. எனவே, அவருக்கு அந்த பதவியை வழங்க முடியாது. மேலும், தலைவர் தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புகளின்படி வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறவில்லை.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ள சிவக்குமார் மீது குற்றச்சாட்டிற்காக ஏற்கனவே துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், மேல்முறையீடும் நிலுவையில் உள்ளது. இவர் போன்றவர்களை நியமனம் செய்தால் எவ்வாறு நேர்மையாக நடைபெறும் எனக் கூறி கோப்பிற்கு அனுமதி அளிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பி உள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவி காலியாக உள்ளது. அந்த பதவியில் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநராக பணிபுரிந்த சைலேந்திர பாபுவை நியமனம் செய்ய அரசு ஏற்கனவே திட்டமிட்டு இருந்தது. எனவே, இதற்காக தலைவர் பதவியில் யாரையும் நியமிக்காமல் மனிதவள மேம்பாட்டுத் துறையும் இருந்து வந்தது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் பதவியிலிருந்து சைலேந்திரபாபு ஓய்வு பெற்ற பின்னர், அவரை தலைவராகவும், அவருடன் சேர்த்து 10 உறுப்பினர்களை நியமிக்கவும் தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கு அரசு பரிந்துரை கடிதத்தை அனுப்பியது.
இந்நிலையில் தலைவர் மற்றும் 10 உறுப்பினர் பதவிகளை நியமனம் செய்வதற்குத் தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்காமலிருந்து வந்தார். டி.என்.பி.எஸ்.சி (TNPSC) அமைப்பில் தலைவர் மற்றும் 14 உறுப்பினர் பதவிகள் உள்ளன. ஆனால், தற்போது அதில் 4 உறுப்பினர் பதவிகள் மட்டுமே நிரப்பப்பட்டு உள்ளது. அதில், ஒருவரான முனியநாதன், தலைவர் பொறுப்பைக் கூடுதலாக வகித்து வருகிறார். பல மாதங்களாகத் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகள் காலியாக இருந்து வரும் நிலையில், டி.ஜி.பி பதவியிலிருந்து ஓய்வு பெற்ற சைலேந்திரபாபு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவிக்கு தமிழக அரசால் பரிந்துரை செய்யப்பட்டார். மேலும், 10 உறுப்பினர் பதவிகளை நியமனம் செய்வதற்கும் பெயர்களைத் தமிழக அரசு ஆளுநருக்குக் கோப்பு மூலம் பரிந்துரை செய்திருந்தது.