சென்னை:சென்னை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தரை தேர்வு செய்வதற்காக, தேடுதல் குழுவை நியமித்து, தமிழக அரசால் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதி இடம் பெறவில்லை எனக் கூறி, தேடுதல் குழு நியமித்த அரசாணையை ரத்து செய்யக் கோரி வழக்கறிஞர் ஜெகன்நாத் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில், கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் தேடுதல் குழுவில் பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியை சேர்க்காததை எதிர்த்த வழக்கில் முடிவு காணும் வரை, துணைவேந்தர் நியமிக்கப்பட மாட்டார் என உத்தரவாதம் அளிப்பது குறித்து ஆளுநரின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி, அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.
தற்போது இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (டிச.20) விசாரணைக்கு வந்தது, அப்போது தமிழக அரசு தலைமை வழக்கறிஞர், துணைவேந்தர் தேடுதல் குழுவை தமிழக அரசு நியமிக்கும் முன், கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி, ஆளுநர் ஒரு தேடுதல் குழுவை நியமித்துள்ளார்.
அந்த குழுவில், பல்கலைக்கழக மானியக் குழு பிரதிநிதியும் சேர்க்கப்பட்டுள்ளார். அந்த குழு நியமனத்தை எதிர்த்து தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கு ஜனவரி 23ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. அதுவரை துணைவேந்தர் நியமனம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என தெரிவித்தார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை பிப்ரவரி 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: 2024ஆம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி.. எந்தெந்த தேர்வு எப்போது நடக்கும் முழு விவரங்கள் உள்ளே!