சென்னை:தேசிய அளவில் நடைபெற்ற 2023 நீட் தேர்வின் முடிவுகள் கடந்த ஜூன் 13ஆம் தேதி வெளியானது. 2022-2023ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வில் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 44ஆயிரத்து 516 மாணவர்கள் எழுதிய நிலையில், 78 ஆயிரத்து 693 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். குறிப்பாக, அரசுப் பள்ளிகளில் இருந்து 12 ஆயிரத்து 997 மாணவர்கள் எழுதி 3,982 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர். மொத்தம் 31 சதவீத மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இந்தியாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கும், கால்நடை மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர்கள் சேர்வதற்கான நீட் தேர்வு தமிழ் உட்பட 13 மொழிகளில் மே மாதம் ஏழாம் தேதி 499 நகரங்களில் 4097 மையங்களில் நடத்தப்பட்டன.
இந்நிலையில், நீட் தேர்வு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர், தமிழ்நாட்டில் இருந்து நீட் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தையும் அவர்களின் அரசுப் பள்ளி மாணவர்களின் தேர்ச்சி மற்றும் எம்பிபிஎஸ் பிடிஎஸ் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் விவரங்களைக் குறித்தும் இந்த தொகுப்பில் காணலாம்:
2022-2023 நீட் தேர்வில் தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர் பிரபஞ்சன் முதல் முறையாக 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண் எடுத்து தேசிய அளவிலான தரவரிசை பட்டியலிலும் முதலிடத்தில் பிடித்து சாதனை புரிந்தார். தேசிய அளவில் 20 லட்சத்து 38 ஆயிரத்து 596 மாணவர்கள் எழுதியதில் 11 லட்சத்து 45 ஆயிரத்து 976 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து, தமிழ்நாட்டில் இருந்து 1 லட்சத்து 44 ஆயிரத்து 516 மாணவர்கள் எழுதினர்.அவர்களில் 78 ஆயிரத்து 693 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பில் சேர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து தமிழ் வழியில் பயிலும் மாணவர்கள் 2023ஆம் ஆண்டில் 30 ஆயிரத்து 536 மாணவர்கள் எழுதியுள்ளனர் என தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் 2022-23ஆம் கல்வி ஆண்டில் 12ஆயிரத்து 997 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியுள்ளனர். அவர்களில் 3,982 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் இளநிலைப் படிப்பில் சேருவதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
இதில் அதிகபட்சமாக,
- சேலம் மாவட்டத்தில் இருந்து 2007 மாணவர்கள் தேர்வு எழுதி 519 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
- புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 822 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 131 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
- திருவள்ளூர் மாவட்டத்தில் 597 மாணவர்கள் நீட் தேர்வினை எழுதி 92 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 481 மாணவர்கள் தேர்வினை எழுதி 237 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர தகுதி பெற்றுள்ளனர்.
- தர்மபுரி மாவட்டத்தில் 548 மாணவர்கள் நீட் தேர்வினை எழுதிய நிலையில் 140 மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்குத் தகுதி பெற்றுள்ளனர்.
- கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 543 மாணவர்களில் நீட்டில் 209 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
- காஞ்சிபுரம் மாவட்டத்தில் 321 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 22 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
- சென்னை மாவட்டத்தில் 296 மாணவர்கள் தேர்வு எழுதி 64 மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.
- தென்காசி மாவட்டத்தில் 335 மாணவர்கள் நீட் தேர்வினை எழுதியதில், 9 மாணவர்கள் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர்.
நீட் தேர்வு கடந்த 2017 -18ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய பின்னர் தமிழ்நாட்டில் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 602 மாணவர்கள் எழுதினர். 45 ஆயிரத்து 336 மாணவர்கள் தகுதி பெற்றனர். அதில் அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் 3,739 மாணவர்கள் நீட் எழுதி, 825 மாணவர்கள் தகுதி பெற்றனர். மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ்,பிடிஎஸ் இடங்களில் மட்டுமே மாணவர்கள் சேர்ந்தனர்.
அதனைத் தொடர்ந்து, 2018- 19ஆம் ஆண்டில் நடைபெற்ற நீட்டில் ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 78 மாணவர்கள் தேர்வு எழுதியதில் 59 ஆயிரத்து 755 மாணவர்கள் தகுதி பெற்றனர். அரசுப் பள்ளியிலிருந்து 8,550 மாணவர்கள் தேர்வு எழுத பயிற்சி அளிக்கப்பட்டது. அதில் 1,151 மாணவர்கள் தகுதி பெற்றனர். ஆனால், மருத்துவப் படிப்பில் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் 6 இடங்களில் மட்டுமே மாணவர்களுக்கு சேர்க்கை கிடைத்தது.
இதுபோன்ற சூழ்நிலையால் மருத்துவப் படிப்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இடம் கிடைப்பதை அதிகரிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு மருத்துவப் படிப்பில் வழங்கப்பட்டது.