சென்னை: சுகாதாரத்துறையில் ஒப்பந்த அடிப்படையிலான பணிநியமனங்களை கைவிட வேண்டும் எனவும், நிரந்தர அடிப்படையில் மருத்துவர்கள், செவிலியர்கள் நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து அதன் பொதுச்செயலாளர் ஜி.ஆர். ரவீந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அனைத்து வகை சுகாதாரத்துறை பணியிடங்களுக்கும், நிரந்தர அடிப்படையில் நியமனங்களைச் செய்யாமல், பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையில், பணி நியமனங்களை சென்னை மாநகராட்சி தொடர்ந்து செய்து வருவது வருத்தத்தை அளிக்கிறது. இது கண்டனத்திற்குரியது. இது சமூக நீதிக்கு எதிரானது.
மாநில அரசும் மருத்துவர்களையும் சுகாதார ஆய்வாளர்களையும், செவிலியர்களையும், இதர ஊழியர்களையும் ஒப்பந்த அடிப்படையில் நியமித்து வருகிறது.
NUHM காரணம் காட்டி பணி நியமனம்
சுகாதாரம் என்பது மாநில அரசுகளின் அதிகார வரம்புக்குள் இருக்கும் பொழுது, தேசிய சுகாதார இயக்கத்தை (National Urban Health Mission - NUHM) காரணம் காட்டி, அந்த இயக்கத்தின் மூலம் பணி நியமனம் செய்வதாகக் கூறிக் கொண்டு, பணியாளர்களை தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பது மாநில உரிமைகளுக்கு எதிரானது.
பணி நியமனங்களில் தேசிய சுகாதார இயக்கம் மூலம் (NUHM), மத்திய அரசு தலையிடுவது மாநில உரிமைகளை பறிக்கும் செயலாகும். சுகாதாரத்தையும் தனது கட்டுப்பாட்டிற்குள் மத்திய அரசு, படிப்படியாக கொண்டு செல்லும் செயலாகும். நீட் தேர்வில் மாநில உரிமைகளுக்கு குரல் கொடுக்கும் தமிழ்நாடு அரசு , NUHM மூலம் பணி நியமனங்களில் மாநில உரிமையை பறிக்கும் மத்திய அரசின் போக்கை எதிர்க்காதது வருத்தம் அளிக்கிறது. பணி நியமனங்களில் மாநில அரசின் உரிமைகள் காக்கப்பட வேண்டும்.