சென்னை, தமிழ்நாட்டில் 10 அல்லது அதற்கு மேல் பணியாளர்களைக் கொண்ட வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளித்து அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக, வணிக நிறுவனங்கள், கடைகள் 24 மணிநேரமும் இயங்க அனுமதி மறுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ’தமிழ்நாடு ஆளுநர், பொது நலன்களுக்காக, 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் பணிபுரியும் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு, துணைப்பிரிவு விதிகளில் இருந்து விலக்கு அளித்துள்ளார். 05.06.2022 முதல் மூன்று ஆண்டு காலத்திற்கு, ஆண்டின் அனைத்து நாட்களிலும் 24x7 கடை திறந்திருக்க அனுமதிக்கப்படுகிறது.
மேலும் வெளியிடப்பட்ட அரசாணையில் சில நிபந்தனைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை, ஒவ்வொரு பணியாளருக்கும் சுழற்சி அடிப்படையில் வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும், மேலும் ஒவ்வொரு பணியாளரின் விவரங்களும் தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவன விதிகள், 1948 இல் சேர்க்கப்பட்ட படிவ Sஇல் வழங்கப்பட வேண்டும்.