சென்னை: நாட்டின் சுதந்திர தினம், விஜயதசமி, டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 33 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி பல்வேறு மாவட்ட ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள் பலரும் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், நீதிமன்றம் உத்தரவிட்டும் ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதிக்கவில்லை எனக் கூறி அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக ஆர்.எஸ்.எஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளில் உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆகியோர் தரப்பில், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி எதிர்காலத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும் வகையில் நிபந்தனைகளுடன் கூடிய வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் தாக்கல் செய்யப்பட்டது.