சென்னை:தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் அனைத்து பேருந்துகளிலும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்க அனுமதிக்கப்படுவர் என அண்மையில் நடந்த சட்டப்பேரவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்திருந்தார்.
தற்போது தமிழ்நாட்டில் 3 முதல் 12 வயது வரையிலான குழந்தைகளுக்கு அரை கட்டணத்தில் பயணச்சீட்டு வழங்கபட்டு வருகிறது. இந்நிலையில் இனி 5 வயது வரை குழந்தைகளுக்கு அனைத்து பேருந்துகளிலும் கட்டணம் வசூலிக்கப்படாது, அவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு வெளியிட்டுள்ள அரசிதழில் இனி 5 வயது வரை உள்ள குழந்தைகள் கட்டணமில்லாமல் அரசுப் பேருந்தில் பயணம் செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அரசிதழில் செய்தி வெளியாகியுள்ளது.
மேலும், மாவட்ட, விரைவு பேருந்துகளில் 3 வயது முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு இருந்த அரை டிக்கெட் அனுமதி, தற்போது ஐந்து வயது முதல் 12 வயதாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் உள்ள அரசு பேருந்துகளில் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகள் டிக்கெட் கட்டணமில்லாமல் பேருந்தில் பயணம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.