சென்னை சேப்பாக்கம் எழிலக வளாகத்திலுள்ள ஆவின் பாலகம் எதிரில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சங்கத்தின் உறுப்பினர்கள் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை காவல்துறையினர் அனுமதிக்காமல் கதவுகளை மூடினர்.
இதனால் அரசு ஊழியர் சங்கத்தினர் எழிலகம் வளாகத்தின் உட்புறத்தில் பேரணியாகச் சென்று பிற அரசு ஊழியர்களும் போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும், சிறை செல்லும் அரசு ஊழியர்களை வாழ்த்தி வழி அனுப்ப வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர்.
தொடர்ந்து, பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தின் கதவுகளை காவல்துறையினர் திறந்தவுடன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில செயலாளர் நம்பிராஜன், "தமிழ்நாடு அரசு புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகளை திரும்பப் பெற வேண்டும்.
போராட்டம் என்றால் என்னவென்றே தெரியாத சங்கங்களை அழைத்து, போராடிய சங்கங்களை கொச்சைப்படுத்தும் வகையில் ஒழுங்கு நடவடிக்கைகளை அரசு திரும்பப் பெற்றுள்ளது. நன்றி மட்டும் கூறும் சங்கங்களை வைத்து, போராடிய சங்கங்களை அரசு கொச்சைப் படுத்தி உள்ளது. இது தங்களை மேலும் போராடத் தூண்டுகிறது.
அரசு ஊழியர் சங்கத்தினர் கைது சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், வருவாய் கிராம உதவியாளர்கள், நூலகர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் பணியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். அவுட்சோர்சிங் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை அழைத்துப் பேசி நிறைவேற்ற வேண்டும். கோரிக்கைகள் நிறைவேறும் வரை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்தொடர் மறியல் போராட்டமும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தும்" என தெரிவித்தார்.