சென்னை:மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் இரண்டாம் ஆண்டையொட்டி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள நகர்ப்புற வாழ்விட குடியிருப்பு பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு வீடு வீடாக சென்று மருத்துவ பெட்டகத்தை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், சென்னை மேயர் பிரியா ராஜன் மற்றும் துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோரும் நேற்று (ஆக. 6) வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், “மக்களை தேடி மருத்துவம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டு, தற்போது இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த ஓராண்டில் மட்டும் தமிழ்நாட்டில், 74.92 விழுக்காட்டினருக்கு பரிசோதனையும், 83 லட்சத்து 23 ஆயிரத்து 723 பேருக்கு மருத்துவ பெட்டகமும் வழங்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் 9 லட்சத்து 59 ஆயிரத்து 706 பேர் மருத்துவ பெட்டகம் பெற்றுள்ளனர். கிராமப்புற மக்களுக்காக இந்த திட்டம் மூலம் 10 ஆயிரம் செவிலியர்களுக்கு மேல் பணியில் உள்ளனர். 19 ஆயிரத்து 535 பேரை இந்த திட்டத்திற்கு முழுவதுமாக செயல்படுத்தி வருகிறோம். இன்னும் 2 ஆயிரம் பேரை இந்த திட்டதிற்கக்காக NHM (National Health Mission) நியமிக்க உள்ளது.