சென்னை:கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று (செப். 30) சேலத்தில் தொடங்கிவைத்தார். இத்திட்டத்தின் நோக்கம் கிராமங்கள், நகர்ப்புறப் பகுதிகளுக்கு மருத்துவக் குழுவினர் சென்று முகாம்கள் நடத்தி பொதுமக்களுக்கு ஏற்படும் நோய்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து குணப்படுத்துவதாகும்.
இத்திட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள சிறப்பு மருத்துவப் பரிசோதனைகள், ஆலோசனைகள் பின்வருமாறு:
- ரத்த அழுத்தப் பரிசோதனை, ரத்தத்தில் சர்க்கரையின் அளவு பரிசோதனை
- இசிஜி பரிசோதனை
- கர்ப்பப்பை வாய் புற்றுநோய் கண்டறியும் பரிசோதனை (PAP Smear)
- கர்ப்பிணிகளுக்கு அல்ட்ராசோனாகிராம் பரிசோதனை
- கண்புரை ஆய்வு மற்றும் பார்வைக் குறைபாட்டிற்கு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்குதல்
- கரோனா தடுப்பூசி வழங்குதல்
- குழந்தைகள் மற்றும் தாய்மார்களுக்கு இதர தடுப்பூசி வழங்குதல்
- கரோனா சம்பந்தமாக சளி பரிசோதனை செய்தல்
- கரோனா நோய்த் தடுப்பு விழிப்புணர்வு
- டெங்கு, பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு
பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையினர், இதய நோய் சிகிச்சை, கண், காது, மூக்கு, தொண்டை உள்பட 16 துறை மருத்துவர்கள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும்.