சென்னை:தமிழ்நாட்டில் முதன்முறையாக இதய சிகிச்சைக்கான செயற்கை நுண்ணறிவு (AI) திறன்கொண்ட OCT-ACR என்ற நவீன கரோனரி இமேஜிங் சாதனத்தை இன்று (ஆக.24) சென்னை ஆழ்வார்பேட்டை காவிரி மருத்துவமனை அறிமுகம் செய்துள்ளது. இதனையடுத்து, துல்லியமாக இந்த அல்ட்ரியான் OCT-ACR -ஐ பயன்படுத்தி வலது கரோனரி தமனி சுருக்க நோய் பாதித்த 59 வயது நபருக்கு சிகிச்சை அளித்து மருத்துவர்கள் சாதித்துள்ளனர்.
இதுகுறித்து பேசிய இச்செயல்முறையை மேற்கொண்ட சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் இதயவியல் மருத்துவர்கள் குழுவிற்கு தலைமை வகித்த டாக்டர். இராஜாராம் அனந்தராமன், "1970ஆம் ஆண்டிலிருந்து ஆஞ்சியோகிராபி சோதனை முடிவுகளை பயன்படுத்தி, வழக்கமான கரோனரி ஆஞ்சியோபிளாஸ்டி மற்றும் ஸ்டென்ட் பொருத்தும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
அல்ட்ராசவுண்டை பயன்படுத்தும் கரோனரி இன்ட்ராவஸ்குலர் இமேஜிங் மற்றும் புதிய கண்டுபிடிப்பான செயற்கை நுண்ணறிவு கொண்ட அல்ட்ரியா OCT-ACR வழியாக இதய ரத்தநாளங்களில் உள்ள அடைப்புகளை மிக வேகமாக சில நொடிகளுக்குள் துல்லியமாக கண்டறிவது இப்போது சாத்தியமாக இருக்கிறது. சிகிச்சை செயல்முறை பாதுகாப்பு மற்றும் துல்லிய நிலையை இது அதிகரிப்பதுடன் அதற்காக எடுக்கும் நேரத்தையும் குறைக்கிறது" என்று விளக்கமளித்தார்.
இது குறித்து சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையின் தலைமை இதயவியல் நிபுணர் டாக்டர் K.P. சுரேஷ் குமார் கூறுகையில், "இந்த சாதன அமைப்பு செயற்கை நுண்ணறிவு திறனுடன் இயங்கி சில நொடிகளுக்குள் விரிவாக தகவல்கள் அனைத்தையும் வழங்குகிறது. அல்ட்ரியான் OCT-ACR வழியாக தரவுகள் வழியாக உடனடியாக பகிரப்படுகின்றன. மேலும், இடையீட்டு மருத்துவ செயல்முறைகளுக்கு நிகழ்நேர வழிகாட்டலும் இதன்மூலம் கிடைக்கப்பெறும். இதன் காரணமாக, துல்லியமாகவும் அதிக பாதுகாப்போடும் சிக்கலான ஒன்றுக்கும் மேற்பட்ட ரத்தநாள PCI செயல்முறையை இதயவியல் மருத்துவ நிபுணரால் மிக விரைவாக செய்ய முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அல்ட்ரியான் COT வழிகாட்டலை பயன்படுத்தி, அதிக சிக்கலான கால்சிய படிமம் இருந்த 50 வயதான ஒரு ஆண் நோயாளிக்கு LAD ஆஞ்சியோபிளாஸ்டியை மிக சிறப்பான சிகிச்சை விளைவுகளோடு நாங்கள் மேற்கொண்டோம். மும்பையில் சமீபத்தில் நடைபெற்ற TCT தெற்கு ஆசிய மாநாட்டின்போது, இந்த மருத்துவ செயல்முறை நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. மாநாட்டில் பங்கேற்று இதனை மெய்நிகர் முறையில் பார்வையிட்ட மருத்துவர்களின் சிறப்பான பாராட்டை பெற்றது" என்று கூறினார்.
இந்த நவீன சாதனத்தின் செயல்பாட்டை தொடங்கும் நிகழ்ச்சிக்கு இத்தாலி நாட்டின் மிலான் நகரிலுள்ள செயிண்ட் ஆன்ட் அம்ப்ரோஜியோ மருத்துவமனையின் இதயவியல் இடையீட்டு சிகிச்சை நிபுணர் டாக்டர். குலியோ குவாலியுமி தலைமை வகித்தார். OCT வழிகாட்டலுடன் மேற்கொள்ளப்படும் PTCA செயல்முறையை டாக்டர். குலியோ, உலகளவில் முன்னோடியாக திகழ்கிறார். இடையீட்டு இதயவியல் சிகிச்சை பிரிவில் அதிக ஆராய்ச்சிகள் மற்றும் மேம்பாடுகளை மேற்கொள்வதில் இவர் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்.
காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குநர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ் கூறுகையில், 'இதயவியல் சிகிச்சை பிரிவு, சமீப ஆண்டுகளில் மிக விரிவான முன்னேற்றத்தை கண்டு, அதிக சிக்கலான இதய நோய்கள் மற்றும் பாதிப்பு நிலைகளுக்கு உகந்த சிகிச்சை வழங்கப்படுவதை சாத்தியம் ஆகியிருக்கிறது என்றார். நோயறிதல் செயல்பாட்டிலும் மற்றும் சிகிச்சையிலும் மிக வேகமாக செயல்பட்டு துல்லியத்தையும், பாதுகாப்பையும் வழங்குவதன் வழியாக உடல்நல பராமரிப்பு துறையை செயற்கை நுண்ணறிவு மிகப்பெரிய அளவில் மாற்றி வருகிறது எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் பேசிய அவர், இந்த சமீபத்திய தொழில்நுட்பத்தின் வழிகாட்டல் உதவியோடு, நோயாளிகளுக்கு மிக அதிக பாதுகாப்போடு சிகிச்சைகளை நாங்கள் வழங்குவோம் என்று நம்பிக்கை கூறினார். இந்த மிக சமீபத்திய தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்திய டாக்டர். K.P. சுரேஷ் குமார், டாக்டர். அனந்தராமன் மற்றும் அவர்களது குழுவினரை நான் மனமார பாராட்டுகிறேன் என்றார். தமிழ்நாட்டில் இதயவியல் சிகிச்சையில் இதன்மூலம் ஒரு புதிய சாதனையை சென்னை, ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை நிறுவியிருப்பதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்' என்று பேசினார்.
இதையும் படிங்க:“நம்பர் 1 உடன் அவர் விளையாடியதே முக்கியம்” - பிரக்ஞானந்தாவின் தந்தை, சகோதரி நெகிழ்ச்சி!