சென்னை: எதிர்வரும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க ஏதுவாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாநில தலைமை தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு ஆலோசனையில் ஈடுபட்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனைக்கூட்டத்தில், சமூக நலத்துறை, பொதுத்துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மாநில தலைமைத் தேர்தல் அலுவலர், “சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களிக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு வாகனம் மற்றும் சக்கர நாற்காலிகள் ஏற்பாடு செய்யப்படும். மாற்றுத்திறனாளிகள் விரும்பினால் தபால் மூலம் வாக்களிக்கலாம்” என்று தெரிவித்தார். மேலும், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தபால் வாக்கு போட விண்ணப்பித்தால் அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.