தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தல் கருத்துக்கணிப்பு வெளியிட இன்று மாலை 6 மணியோடு நேரம் முடிந்துவிட்டது. தமிழகத்தில் நேற்று மட்டும் ரூ. 8.62 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதுவரையில் ரூ.122.29 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பணம் பறிமுதல் தொடர்பாக 128 எப்.ஐ.ஆர்-கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பணம் கொடுக்கப்படுவதாக இதுவரை வழக்குகள் பதிவாகவில்லை. பணம் பறிமுதல் உள்படஇதுவரை 1,576 வழக்குகள் மொத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 14 பேர் சி.ஆர்.பி.சி. சட்டப்படி கைது செய்யப்பட்டுள்ளனர்.
சீ விஜில் செயலி மூலம் 1954 புகார்கள் வந்துள்ளன. அதில் 834 புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ரூ.32.72 லட்சம் மதிப்புள்ள மதுப்பாட்டில்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.26.79 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ரூ.7.54 கோடி மதிப்புள்ள லேப்டாப், குக்கர், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 812 கிலோ தங்கம் மற்றும் 482 வெள்ளி இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சென்ட்ரல் ரயில் நிலையம் பெயர் மாற்றம் தொடர்பாக எந்த புகாரும் வரவில்லை. இந்திய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்தே ரயில் நிலையம் பெயர் மாற்ற அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் ஒருவர் மட்டும் புகார் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அரசிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சியினர் யாரும் இது தொடர்பாக இதுவரை புகார் கொடுக்கவில்லை. வேலூர் பணம் பறிமுதல் தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளதாக அந்த மாவட்ட ஆட்சியருக்கு, எஸ்பி தகவல் கொடுத்துள்ளார். அதுதொடர்பாக நீதிபதி இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளார். தற்போது, அவரின் உத்தரவுக்காக வேலூர் மாவட்ட நிர்வாகம் காத்திருக்கிறது.
மொத்தம் ரூ.2.47 கோடி மதிப்புள்ள விரல் மை கொள்முதல் செய்யப்பட்டு, ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் 10 மில்லி அளவுள்ள விரல் மை பாட்டில்கள் இரண்டு வழங்கப்பட உள்ளன. 63, 951 காவல்துறையினர் வாக்குப்பதிவின்போது பணியில் அமர்த்தப்பட உள்ளனர். வாக்குப்பதிவின்போது, 27,408 ரிசர்வ் போலீசாரும் பணியில் அமர்ததப்பட உள்ளனர். என்.எஸ்.எஸ் மாணவர்கள், தன்னார்வலர்கள் 14,000 பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 13,886 ஹோம் கார்டு காவலர்கள் தேர்தல் பணியில் பயன்படுத்தப்பட உள்ளனர். 2,500 ஜே.சி.எஸ் தன்னார்வலர்களும் பணியில் இருப்பார்கள். ஓய்வுபெற்ற காவல்துறையினர் எஸ்.ஐ மற்றும் காவலர்கள் 14,400 தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். 160 கம்பெனி படையினரும் ஏற்கனவே கூறப்பட்டதுபோல் தேர்தல் பணியில் ஈடுபடுவார்கள் என்றார்.