தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் விடைத்தாள் நகல், மறுமதிப்பீட்டிற்கு அனுமதி!

SSLC Exam Answer Sheet: தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கும் வரும் ஆண்டில் இருந்து விடைத்தாள் மறுமதிப்பீடு செய்தல், விடைத்தாள் நகல் வழங்குவதற்கும் பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 13, 2023, 4:51 PM IST

சென்னை: கடந்தாண்டு வரையில் மாணவர்கள் சரியாக எழுதி இருந்தும் விடைக்கான மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ள முடியாது. மாணவர்களுக்கு மதிப்பெண் அதிகமாக வரும் என நம்பிக்கை இருந்தால் விடைத்தாள் மறுகூட்டலுக்கு மட்டும் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

விடைத்தாள் நகல் வழங்க, தமிழ்நாடு மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வினை அரசுத் தேர்வுகள் இயக்ககம் நடத்தி வருகிறது. 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட ஆரம்பித்ததில் இருந்து மாணவர்களுக்கு விடைத்தாள் திருத்தம் செய்யப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியான பின்னர், மறுகூட்டல் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

உத்தரவு நகல்

இந்த நிலையில், பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் குமரகுருபரன் இன்று (டிச.13) வெளியிட்ட அரசாணையில், 'பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 1982ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் விடைத்தாள் மறுகூட்டல் கேட்பவர்களுக்கு விடைத்தாள் மறுகூட்டல் செய்து முடிவுகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து, 2009 ஆம் ஆண்டு முதல் மேல்நிலை (12ஆம் வகுப்பு) மாணவர்களின் விடைத்தாள் நகல்களை வழங்கவும், மறுமதிப்பீடு செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் எழுதியுள்ள கடிதத்தில், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, துணைத்தேர்வு, தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாள்களில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து வெளியிடப்படும் முடிவுகளில் மதிப்பெண்கள் மாற்றம் இல்லாத மற்றும் மறுகூட்டல் மதிப்பெண்கள் முடிவுகளில் திருப்திகரமாக இல்லாததால் நீதிமன்றங்களை அணுகியும், தகவல் அறியும் உரிமை சட்டம் (RTI) மூலமாகவும், முதலமைச்சரின் தனிப்பிரிவு மூலமாகவும் ஒவ்வொரு ஆண்டும் விடைத்தாள் நகல் பெற்று வருகின்றனர்.

அவர்கள் விண்ணப்பிக்கும் போதும், விடைத்தாள்களை ஆய்வு மேற்கொள்ளும் போதும், விடைத்தாள்களில் மறுமதிப்பீடு சாத்தியக்கூறுகள் இருந்தாலும், ஸ்கேன் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான அரசாணை இல்லாததாலும், பெறப்படாததாலும் மறுமதிப்பீடு கேட்கும் தேர்வர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகிறது. எனவே, மேல்நிலை தேர்விற்கு உள்ளதுபோல, 10ஆம் வகுப்பு தேர்விற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் மேல்நிலைத் தேர்வுகளுக்கான (12, 11ஆம் வகுப்பு) விடைத்தாளின் நகல்கள் வழங்குவது போலும், மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு மேற்கொள்வது போலும், 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு, துணைத்தேர்வு, தனித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விடைத்தாள் ஒளி நகல் வழங்கவும், மறுகூட்டல் மறுமதிப்பீடு ஆகிய பணிகளை வழங்கவும் அரசுத் தேர்வுகள் இயக்குனருக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

10ஆம் வகுப்பு தேர்விற்கு ஒவ்வொரு பாடத்திற்கும் மாெத்த மதிப்பெண்கள் 100 என்பதால், மேல்நிலை தேர்வுகளுக்கு ஸ்கேன், மறுமதிப்பீடு மற்றும் மறுகூட்டலுக்கும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு விடைத்தாளின் ஸ்கேன் நகல் பெறுவதற்கு ரூ.275-ம், ஒரு விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.505-ம், விடைத்தாள் நகல் பெற்றப்பிறகு ஒரு விடைத்தாள் மறுகூட்டல் செய்ய ரூ.205-ம் என கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என அதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மதுரையையும் சென்னை போல் மாற்றிவிடக்கூடாது.. அனுமதியில்லா கட்டட வழக்கில் - எச்சரித்த மதுரை உயர் நீதிமன்றம்!

ABOUT THE AUTHOR

...view details