தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வீடு தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ளது. இதனால் அந்தப் பகுதி எப்போதும் காவலர்களின் பாதுகாப்பு இருந்துகொண்டே இருக்கும்.
இந்த நிலையில் செப்டம்பர் 27ஆம் தேதி அடையாளம் தெரியாத நபர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீப்பற்ற வைத்தபடி சித்தரஞ்சன் சாலை நோக்கி ஓடிவந்தார். அப்போது அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலர்கள் இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
அதன்பின் அந்த நபரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனைக்கு காவல் துறையினர் அனுப்பிவைத்தனர். அந்த நபர் தற்போது கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 40 விழுக்காடு தீக்காயங்களுடன் மருத்துவம் பெற்றுவருகிறார்.
முதலமைச்சரின் வீட்டின் அருகே ஒருவர் தீக்குளித்த சம்பவத்தை அறிந்த தேனாம்பேட்டை காவல் துறையினர், அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா ஜமீன்தேவர்குளம் காலனித் தெருவைச் சேர்ந்த வெற்றிமாறன் என்பது தெரிந்தது.
காப்பாற்றிய காவல் துறையினர் இவர் தமிழ்நாடு பறையர் பேரவைத் தலைவராக உள்ளார். ஜமீன்தேவர்குளம் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு மனு தாக்கல் செய்து, விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, மனுவை ஏற்றுக்கொள்ளக் கோரி தீக்குளித்ததாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், வெற்றிமாறன் உடலில் தீவைத்துக் கொண்டு சித்தரஞ்சன் சாலைக்குள் வந்த அவரைச் சாதுரியமாகச் செயல்பட்டு அங்கிருந்த காவலர்கள், குடிப்பதற்காக வைத்திருந்த நீலை ஊற்றி தீயை அணைத்தது தொடர்பான சிசிடிவி தமிழ்நாடு காவல் துறை தங்களுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டது.
மேலும் தீக்குளித்த வெற்றிமாறனை விரைந்துசென்று காப்பாற்றிய காவல் ஆய்வாளர் லலிதா, சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ்பாபு, காவலர்கள் கோபிநாத், ராஜசேகர், கார்த்திக் ஆகியோரைத் தமிழ்நாடு காவல் துறைத் தலைவர் சைலேந்திரபாபு நேரில் வரவழைத்துப் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
இதையும் படிங்க: தொப்புள் கொடியில் தீ... சர்ச்சையில் சிக்கிய 'கண்ணகி'