தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தி கேரளா ஸ்டோரி' படம் வெளியிடப்படும் தியேட்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க டிஜிபி உத்தரவு - ban film

'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியாக உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் எஸ்.பி.க்களுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

TN DGP orders to provide security to theaters where The Kerala Story film will be released
TN DGP orders to provide security to theaters where The Kerala Story film will be released

By

Published : May 4, 2023, 10:18 PM IST

சென்னை: 'தி கேரளா ஸ்டோரி' என்ற திரைப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதில் கேரள பெண்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டு பயங்கரவாத அமைப்புகளில் சேர்வது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிரெய்லர் விமர்சனத்திற்குள்ளாகி உள்ள நிலையில் மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினை வாதத்தைத் தூண்டும் விதமாக இந்த படத்தின் டிரெய்லர் அமைந்திருப்பதாகவும், சங்பரிவாரின் கொள்கையை பிரசாரம் செய்வதற்காகவே எடுக்கப்பட்ட படம் தான் 'தி கேரள ஸ்டோரி'(The Kerala Story) என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தார். இந்த திரைப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. ஆனால், இதனை தடை செய்ய நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துவிட்டது.

இந்த நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் நாடு முழுவதும் நாளை வெளியாக உள்ள நிலையில் அனைத்து காவல் ஆணையர்கள் மற்றும் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர்களுக்கு தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் திரையிட உள்ள அனைத்து திரையரங்குகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும்; திரையரங்குகளுக்கு வருவோரை சோதனை செய்த பின்பே உள்ளே அனுமதிக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பதற்றமான இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திரைப்படம் தொடர்பாக சமூக வலைதளங்களில் சட்டம் ஒழுங்கைப் பாதிக்கும் வகையில் கருத்துகள் வெளியிடப்பட்டால், அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இத்திரைப்படம் தொடர்பாக எதிர்ப்புத் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டால் உடனடியாக அகற்ற வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

'தி கேரளா ஸ்டோரி' படம் வெளியாவதற்கு பல்வேறு அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்து திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்த உள்ளதாகவும், எதிர்ப்புத் தெரிவித்து போஸ்டர்கள் ஒட்டப்படுவதாகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரவுவதன் காரணமாக தமிழ்நாடு டிஜிபி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

தமிழ்நாட்டில், 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படத்தை வெளியிட்டால் எதிர்ப்புகள் ஏற்படக்கூடும் என அரசுக்கு உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், 'தி கேரளா ஸ்டோரி' படத்துக்கு தமிழ்நாட்டில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை என்றும்; முதல் காட்சி முக்கிய நகரங்களில் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்றும்;அவையும் சில காட்சிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற சிறிய ஊர்களில் வெளியாகவில்லை எனவும் தெரியவருகிறது.

இதையும் படிங்க: 'ஆளுநர் ரவிக்கு அரசியலமைப்புச் சட்டம் தெரியவில்லை' - டி.கே.எஸ் இளங்கோவன்!

இதையும் படிங்க: திராவிட மாடல் ஒரு காலாவதியான கொள்கை; CM மீது தனிப்பட்ட மரியாதை உண்டு - ஆளுநர் ஆர்.என்.ரவி

ABOUT THE AUTHOR

...view details