தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (மே.26) வெளியிட்டுள்ள புள்ளிவிவரத் தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 62 ஆயிரத்து 518 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 33 ஆயிரத்து 764 நபர்களுக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் இதுவரை மொத்தம் இரண்டு கோடியே 62 லட்சத்து 38 ஆயிரத்து 649 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் 19 லட்சத்து 45 ஆயிரத்து 260 பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் மூன்று லட்சத்து 10 ஆயிரத்து 224 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் இன்று (மே.26) 29 ஆயிரத்து 717 பேர் பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 16 லட்சத்து 13 ஆயிரத்து 221ஆக உயர்ந்துள்ளது. அதே போல் சிகிச்சைப் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 197 நபர்களும், அரசு மருத்துவமனையில் 278 நபர்களும் என 475 பேர் உயிரிழந்தனர். இதனால் இறந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்து 815 என உயர்ந்துள்ளது.