சென்னை:ராமேஸ்வரத்தில் இருந்து கடந்த 4 நாட்களுக்கு முன்பு, மீனவர்கள் பலர் தங்கள் மீன்பிடிப் படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். அவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டு இருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படைத் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி கைது செய்துள்ளனர். மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேஸ்வரம் மீனவ மக்கள் சார்பாக கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை அடுத்து மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுத்தியுள்ளார்.
அந்த கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் IND-TN-10-MM-677 மற்றும் IND-TN-10-MM-913 பதிவு எண்கள் கொண்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில்,( 9-7-2023) நேற்று இலங்கைக் கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் எனவும், அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இச்சம்பவம் தமிழகத்தில் உள்ள மீனவ சமூகத்தினரிடையே பெரும் மன உளைச்சலையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்திய-இலங்கைக் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பியே பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளதாக கூறியுள்ளார்.