சென்னை: அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டடங்கள், மருத்துவமனைக் கட்டடங்கள் மற்றும் அரசு துறைக் கட்டடங்களை விரைவாகவும், தரமாகவும் அமைத்திட வேண்டும் என பொதுப்பணித்துறை ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், பொதுப்பணித்துறையின் செயல்பாடுகள் குறித்தும், புதிதாகச் செயல்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டடங்கள், மருத்துவமனைக் கட்டடங்கள் மற்றும் அரசு துறைக் கட்டடங்களை விரைவாகவும், தரமாகவும் உரிய காலத்தில் கட்டி முடித்து பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.
மேலும், மதுரையில் கலைஞரின் பெயரில் சர்வதேச தரத்திலான பொது நூலகம், சென்னை, கிண்டியிலுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை, தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனுக்கு நினைவகம் ஆகியவற்றை அமைப்பது குறித்தும்; 10 ஆண்டுகளாகப் பராமரிப்பின்றிப் பழுதடைந்துள்ள சென்னை வள்ளுவர் கோட்டத்தைப் புனரமைத்து, அங்கு ஆய்வுக்கூடம் மற்றும் நூலகம் அமைத்துச் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
கரோனா பேரிடர் காலத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பொதுப்பணித்துறையின் மூலம் அமைக்கப்பட்ட சிறப்பு சிகிச்சைப் பிரிவுகள், ஆக்சிஜன் இணைப்புகளுடன் கூடிய படுக்கைகள், அரசு மருத்துவமனைகள் மற்றும் 11 அரசு மருத்துவக் கல்லூரிகள் ஆகியவற்றிற்காகக் கட்டப்படும் கட்டடப் பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் ஆய்வுசெய்து, பணிகளை விரைந்து முடித்திட அறிவுறுத்தினார்.
சிவகங்கை மாவட்டம், கீழடி அகழ் வைப்பக கட்டட வளாகம் மற்றும் பல்வேறு பாரம்பரியக் கட்டடங்களைப் புனரமைப்பு செய்யும் பணிகள், இவற்றின் முன்னேற்றங்கள் ஆகியவை குறித்தும், புதிதாகக் கட்டப்பட்டுவரும் 6 மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கட்டடங்களின் பணி முன்னேற்றம், நீதிமன்றம் மற்றும் சட்டக் கல்லூரிகளுக்காகக் கட்டப்படும் கட்டடங்களின் பணி முன்னேற்றம், சேலம் மாவட்டம் தலைவாசலில் கட்டப்பட்டு வரும் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையக் கட்டடங்கள் ஆகியவை குறித்தும் ஆய்வுசெய்த முதலமைச்சர், அனைத்து அரசுக் கட்டடங்களையும் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தரமாகக் கட்டி முடித்திட வேண்டும் என்று துறை அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இக்கூட்டத்தில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ச கிருஷ்ணன், பொதுப்பணித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் முனைவர் சந்தீப் சக்சேனா , பொதுப்பணித்துறை தலைமை முதன்மைப் பொறியாளர் ஆர்.விஸ்வநாத் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: 'நீட்டை எதிர்கொள்ளும் நெருக்கடிமிகு சூழல் உண்மையில் வருந்தத்தக்கதே!' - ஸ்டாலின்