சென்னை:தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (நவ.27) சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி. சிங்கின் முழு திருவுருவச்சிலையை திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மறைந்த முன்னாள் இந்தியப் பிரதமர் வி.பி. சிங்கின் திறப்பு விழாவில் தமிழக முதல்வர் உரையாற்றினார். அப்போது பேசும் போது, "சென்னை - மண்டல் கமிஷன் பரிந்துரையை வி.பி.சிங் கொண்டு வந்த பொழுது ஆதிக்க சக்திகள் சிலர் அதை எதிர்த்தார்கள். அதை எதிர்த்து, போராட்டங்களும் நடத்தினார்கள். அதே நேரத்தில், கருணாநிதி வி.பி.சிங்கிற்கு ஆதரவாக இருந்தார்.
உத்திரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் தற்போது, முன்னாள் பிரதமர் வி.பி.சிங் அவர்களின் சிலை திறப்பு விழாவிற்கு இங்கு வந்துள்ளார். வி.பி.சிங்கிற்கு உத்திரபிரதேசம் தாய் வீடு என்றால் தமிழகம் அவருக்குத் தந்தை வீடு என்றும் அந்த அளவிற்குக் கருணாநிதிக்கும், வி.பி.சிங்கிற்குமான நல்லுறவு இருந்தது. தந்தை பெரியாரின் பெயரை உச்சரிக்காமல் வி.பி.அவர்களின் பேச்சு என்றைக்கும் இருந்ததில்லை என்றார். இன்றைக்கு நான் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு வி.பி.சிங் அவர்களுக்குச் சிலை திறந்திருக்கிறேன் இதைவிடப் பெருமை வேரென்ன எனக்கு வேண்டும்.
தற்போது கூட நமக்கான உரிமைகள் முழுமையாகக் கிடைக்காத, கிடைக்க முடியாத சூழல்தானே நிலவுகிறது. குறிப்பாக, சொல்ல வேண்டும் என்றால் கல்வி நிறுவனங்களில் ஓபிசி இட ஒதுக்கீடு 2006ஆம் ஆண்டுக்கு பிறகுதான் நடைமுறைக்கு வந்தது. பல்கலைக்கழக மானியக் குழு இணை இயக்குநர் பதவிக்கு இட ஒதுக்கீடே கிடையாது எல்லாமே பொதுப்பிரிவு. 45 மத்தியப் பல்கலைக்கழகங்களில், பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த பேராசிரியர்கள் 4 விழுக்காடு மட்டும்தான். இப்படித்தான் பல்வேறு துறைகளில் இன்றைக்கும் நிலைமை இருக்கிறது.
எது எப்படி இருந்தாலும் தமிழகத்தைப் பொருத்தவரை மக்களுக்கான சமூக நீதியைப் பெற்றுத் தருவதில் தவறியதில்லை. குறிப்பாக, இந்தியா முழுவதும் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில் இல்லாமல் இருந்த ஓபிசி இட ஒதுக்கீட்டை 29.7.2021 அன்று உச்சநீதிமன்றம் மூலமாகத் திராவிட முன்னேற்றக் கழகம்தான் இந்தியாவிற்கே பெற்றுத் தந்தது.