ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் 118.40 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ராணிப்பேட்டை புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பெருந்திட்ட வளாகம் மற்றும் 32.18 கோடி ரூபாய் செலவிலான 23 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், 22.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 5 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 71 ஆயிரத்து 103 பயனாளிகளுக்கு 267.10 கோடி ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை, “தென்னிந்தியாவில் இருக்கும் தொழில் மையங்களில் ஒன்றாகவும் ராணிப்பேட்டை இருக்கிறது. தோல் பொருள் ஏற்றுமதியில், உலகத்தின் கவனத்தை ஈர்க்கும் மாவட்டமாகவும் இது இருக்கிறது. அனைத்து சமூக மக்களும் அமைதியாக வாழும் சமரசம் உலவும் மாவட்டமாகவும் இந்த மாவட்டம் இருக்கிறது. புதிதாக உருவாக்கப்பட்டிருக்கக்கூடிய மாவட்டமாக இருந்தாலும், பல்வேறு பணிகளைச் சிறப்பாக நிறைவேற்றி வரும் மாவட்டங்களில் இந்த ராணிப்பேட்டை முன்னணியில் இருப்பதை நான் தெளிவாக உணர்ந்திருக்கிறேன்.
‘மீண்டும் மஞ்சள் பை’ திட்டத்தை சீரிய முறையில் செயல்படுத்திக் கொண்டிருக்கக்கூடிய மாவட்டமாக ராணிப்பேட்டை மாவட்டம் இருப்பதை அறிந்து, இந்த மாவட்ட நிர்வாகத்தை நான் மனதாரப் பாராட்டுகிறேன், வாழ்த்துகிறேன்.
36ஆயிரம் பங்களிப்பாளர்களின் பங்களிப்புடன், 3 மணி நேரத்தில் 187 டன் நெகிழிக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு இருக்கிறது. இது மிகப்பெரிய சாதனை. ஏற்கனவே 128 டன் சேகரித்து, ஸ்விட்சர்லாந்து நாட்டில் நிகழ்த்தப்பட்ட உலக சாதனையை முறியடித்திருக்கிறது.
பனப்பாக்கத்தில், 400 கோடி ரூபாய் செலவில் 250 ஏக்கர் பரப்பளவில் மெகா காலணி உற்பத்தி பூங்கா ஒன்று அமைக்கப்படும். நேற்று (ஜூன் 29) மாலை வேலூரில் நடைபெற்ற அரசு விழாவில், நம்முடைய துரைமுருகன் எடுத்து வைத்த அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, காட்பாடியில் சிப்காட் அறிவித்தேன். சர்வதேச அளவில், தலைசிறந்த காலணி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக ராணிப்பேட்டை மாவட்டம் மேலும் வலுப்பெறும். இந்தப் பூங்கா நிறுவப்படும் காரணத்தால், 20 ஆயிரம் பேருக்கு, குறிப்பாக பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டதில் ஏறக்குறைய 70 விழுக்காடு, 80 விழுக்காடு நாம் நிறைவேற்றி இருக்கிறோம். அதனால்தான் உங்கள் முன்னால் இன்றைக்கு கம்பீரமாக நான் நின்று கொண்டு இதை தெளிவுப்படுத்திக் கொண்டிருக்கிறேன். நாங்கள் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சியில் இருக்கக்கூடியவர்கள், சில உதிரிக் கட்சியில் இருக்கக்கூடியவர்கள், நாங்கள் தான் அடுத்த முதலமைச்சர் என்று சொல்லிக் கொண்டு அனாதைகளாக அழைந்து கொண்டிருக்கக்கூடியவர்கள் இன்றைக்கு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
நான் இதை சட்டப்பேரவையிலும் சொல்லியிருக்கிறேன், மக்கள் மன்றத்திலும் சொல்லியிருக்கிறேன், எந்தெந்த வாக்குறுதிகளை எல்லாம் நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை நான் பட்டியல் போட்டு, இங்கே கூட பட்டியல் போட்டுத்தான் உங்களிடத்தில் சொல்லியிருக்கிறேன். புள்ளி விபரத்தோடு தான் சொல்லியிருக்கிறேன். இந்த அரசாங்கத்தினுடைய இதயம் என்பது இத்தகைய விளிம்புநிலை மக்களின் மகிழ்ச்சியில்தான் இருக்கிறது. பழங்குடியின மக்களுக்கு ஒரு அடையாள அட்டை கொடுப்பதும், பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை உருவாக்குவதற்கு இணையானது.