சென்னை:திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த சில முக்கியமான திட்டங்களை "முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்" என்று வகைப்படுத்தி, அவை செயல்படுத்தப்படும் விதம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. "முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்" குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஏற்கனவே அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் 5 கட்டங்களாக ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி உள்ளார். இந்த நிலையில், இன்று(ஆகஸ்ட் 4ஆம் தேதி) ஆறாவது கட்டமாக 'முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள்' தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
இன்று காலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடந்த இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் மற்றும் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்கள் தொடர்பாக விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது.