தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கழிவுகளைச் சேகரிக்கும் திட்டம் - பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம் - PM Modi

கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில், அணு எரிபொருள் கழிவுகளைச் சேகரிக்கும் மையத்தை அமைத்திடும் நடவடிக்கையை, மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம், நலனைக் கருத்தில்கொண்டு கைவிட வேண்டும் எனக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்
பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

By

Published : Feb 18, 2022, 7:35 PM IST

சென்னை:தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலைய வளாகத்தில், பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளைச் சேகரிக்கும் மையத்தினை அமைத்திடும் நடவடிக்கைகளைக் கைவிடக் கோரி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (பிப்ரவரி 18) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், “கூடங்குளம் அணுமின் நிலைய திட்டத்தின்கீழ், அணு உலைகளிலிருந்து வெளியேறும் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை அகற்றுவது தொடர்பாகப் பொதுமக்களிடையே உள்ள கவலையை இந்தியப் பிரதமரின் கவனத்திற்குக் கொண்டுவருகிறோம்.

இந்தத் திட்டத்தில் ஆயிரம் மெகாவாட் திறன்கொண்ட ஆறு அணுமின் உலைகள் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அந்த ஆறு அலகுகளில், அலகுகள் 1 மற்றும் 2 ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. அலகுகள் 3 மற்றும் 4 கட்டுமானத்தில் உள்ளன. அலகுகள் 5 மற்றும் 6 இன்னும் நிறுவப்படவில்லை.

ஆறு அணுமின் உலைகளிலிருந்து உருவாகும் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே, அணு உலைக்கு அப்பால் (Away from reactor) சேமித்துவைப்பதற்கான வசதிகளை அமைக்க இந்திய அணுமின் கழகம் திட்டமிட்டிருக்கிறது.

இது தொடர்பாக, சுற்றுச்சூழல், வனம், காலநிலை மாற்ற அமைச்சகம், அலகுகள் 1 மற்றும் 2-க்கு முன்பு அனுமதி அளித்தபோதே, இரண்டு அலகுகளில் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, தற்காலிகமாக அணுமின் நிலைய வளாகத்திற்குள் (உலையில்) சேகரித்து, சேமித்து, பின்னர் அதன் சொந்த நாடான ரஷ்யாவிற்கே திருப்பியனுப்பிட ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

பின்னர் பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்திற்குள்ளேயே, அணு உலைக்கு அப்பால் (Away from reactor) சேமித்து வைப்பதற்கான வசதிகளை நிரந்தரமாக ஏற்படுத்திட முடிவு செய்யப்பட்டது. மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.

பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை, அணுமின் நிலைய வளாகத்திற்குள், அணு உலைக்கு அப்பால் சேமித்து வைப்பதால் ஏற்படும் அபாயங்கள், ஆபத்துகள் தொடர்பான சாத்தியக் கூறுகள் குறித்து பல்வேறு அரசியல் கட்சிகள் உள்பட தமிழ்நாடு மக்களின் ஆழ்ந்த கவலையையும், அச்சத்தையும் தாம் பகிர்ந்து கொள்கிறோம். உலகெங்கிலும் பல இடங்களிலுள்ள இதுபோன்ற வசதிகள் விபத்துகளை எதிர்கொண்டுள்ளன.

சுற்றுச்சூழல் மற்றும் அத்தகைய ஆலைப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இது பேரழிவினை ஏற்படுத்திட வழிவகுத்திடும். அப்பகுதியிலுள்ள மக்கள் தங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அச்சம் கொண்டுள்ளனர். அதன் காரணமாக அணுமின் நிலைய வளாகத்திற்குள், பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளைச் சேமித்து வைத்திடும் வசதியை ஏற்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராடி வருகின்றனர்.

மக்களின் பாதுகாப்பு, சுகாதாரம், நலன்களைக் கருத்தில்கொண்டு, பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகளை மீண்டும் ரஷ்யாவுக்கே கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொள்ளவும். இந்நடவடிக்கை அலகுகள் 1 மற்றும் 2-க்கு மட்டுமல்லாமல், அடுத்தடுத்த நான்கு அலகுகளுக்கும் மேற்கொள்ளப்பட வேண்டும்.

இது சாத்தியப்படாவிடில், மக்கள் வசிக்காத மற்றும் சூழலியல் அல்லாத பகுதியில், நிலத்தடி ஆழ்நிலை கிடங்கு (Deep Geological Repository) அமைத்து, பயன்பாடு முடிந்த அணு எரிபொருள் கழிவுகள் நிரந்தரமாக சேமிக்கப்படலாம். தமிழ்நாட்டிலுள்ள 8 கோடி மக்களின் சார்பாக இந்த வேண்டுகோளை நான் விடுக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:கேரள ஆளுநரின் உரை உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது - அமைச்சர் துரைமுருகன்

ABOUT THE AUTHOR

...view details