மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாராலிம்பிக் தொடர் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 5ஆம் தேதிவரை நடைபெறுகிறது. இத்தொடரில், இந்தியா சார்பில் மொத்தம் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
இதில் துப்பாக்கிச் சுடுதல் 10 மீட்டர் ஏர் ரைஃபிள் பிரிவில் இந்திய வீராங்கனை அவனி லெகாரா தங்கப் பதக்கமும், வட்டு எறிதல் எஃப்-56 பிரிவில் இந்திய வீரர் யோகேஷ் கத்துனியா வெள்ளிப் பதக்கமும், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர்கள் தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங் குர்ஜார் ஆகியோர் வெள்ளி, வெண்கலப் பதக்கங்களும் வென்றுள்ளனர். இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் பாரா ஒலிம்பிக் தொடரில் இன்று (ஆகஸ்ட்.30) வெற்றிபெற்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்திருக்கும் நான்கு வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதில், "பாராலிம்பிக் தொடரில் தங்கப் பதக்கம் வென்ற அவனி லெகாராவுக்கு வாழ்த்துகள். உங்கள் அபாரமான சாதனையால் நான் மகிழ்ச்சியடைகிறேன். வட்டு எறிதல் எஃப்-56 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற யோகேஷ் கத்துனியா, ஈட்டி எறிதல் போட்டியில் வென்ற தேவேந்திர ஜஜாரியா, சுந்தர் சிங் குர்ஜார் ஆகியோருக்கு வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பாரா ஒலிம்பிக் தொடரில் வென்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "டோக்கியோ பாரா ஒலிம்பிக் போட்டிகளின் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை அவனி லெகாரா, வட்டு எறிதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற வீரர் யோகேஷ் கதுனியா, ஈட்டி எறிதலில் வெள்ளி, வெண்கலம் வென்ற தேவேந்திர ஜஜாரியா, சுந்தர்சிங் ஆகியோருக்கு வாழ்த்துகள்.
பாராலிம்பிக் போட்டிகளில் ஒரேநாளில் இந்தியா நான்கு பதக்கங்களை வென்றது இதுவே முதல்முறை. இந்தியா அதிக பதக்கங்களை வென்றிருப்பதும் இந்தப் போட்டியில் தான். இந்தியா பெருமை கொள்வதற்கு காரணமான சாதனையாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த வீரர்கள்: பிரதமர் மோடி வாழ்த்து