சென்னை:முன்னாள் இந்தியப் பிரதமர், சமூக நீதிக் காவலர் வி.பி. சிங்கிற்கு மாநிலக் கல்லூரி வளாகத்தில் சிலை நிறுவப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''முன்னாள் பிரதமர், சமூக நீதிக் காவலர், பிற்படுத்தப்பட்ட மக்களின் கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்த வி.பி.சிங்கிற்கு, மரியாதை செய்யும் விதமாக, சென்னையில் அவரது முழு உருவ கம்பீரச் சிலை அமைக்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் 20.4.2023 அன்று சட்டமன்றப் பேரவை விதி-110-ன் கீழ் அறிவித்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம், அலகாபாத் மாவட்டத்தில் அந்நாளில் பெரும் ஜமீன்தாராக இருந்த ராஜா தயாபகவதி பிரதாப் சிங்கிற்கு மகனாக பிறந்த விஸ்வநாத் பிரதாப் சிங், செல்வச் சூழ்நிலையில் வளர்ந்தாலும் அதில் மனம் ஒட்டாமல் சட்டக் கல்லூரி படிக்கும் காலத்திலேயே காந்திய இயக்கத்தில் ஈடுபட்டவர். சர்வோதய சமாஜத்தில் இணைந்து பூமிதான இயக்கத்தில் பங்கெடுத்து தனது நிலங்களையே தானமாக வழங்கியவர்.
பின்னாளில் உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சராகவும், ஒன்றிய வர்த்தக அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தவர். பின்னர் தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக ஆனார். அவர் பிரதமராக இருந்தது பதினோரு மாதங்கள் தான் என்றாலும், அதற்குள் அவர் செய்த சாதனைகள் மகத்தானவை.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின, பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள்தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை.