சென்னை:தமிழ்நாடு பேரவைக்கூட்டத்தில் இன்று (மே7) கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. திட்டங்கள், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறை, பொதுத்துறை, நிதித்துறை, மனிதவள மேலாண்மைத் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வுகால நன்மைகளும் உள்ளிட்ட துறைகளின் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறுகிறது.
முன்னதாக பேரவை கூட்டம் தொடங்கியதும், திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆனதையொட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அரசின் ஓராண்டு சாதனைகளை பேரவையில் பதிவுசெய்தார். பின்னர் 110விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
110விதியின் கீழ் 5 முக்கிய அறிவிப்புகள் அதன் அடிப்படையில் ஐந்து முக்கிய அறிவிப்புகள்,
- அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படும். முதற்கட்டமாக ஊராட்சி பகுதிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். 1 முதல் 5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கப்படும்.
- ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் 6 வயத்திற்கு உள்பட்ட குழந்தைகளை நலமுடன் வளர்த்தெடுக்க இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மருத்துவ வசதி தேவைப்படும் குழந்கைகளுக்கு மருத்துவ உதவி. ஊட்டச்சத்து தேவைப்படும் குழந்கைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து திட்டம் செயல்படுத்தப்படும்.
- தமிழகம் முழுவதும் தகைசால் பள்ளிகள் உருவாக்கப்படும். 21 மாநகராட்சிகளில் உள்ள அரசு பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
- மாநகராட்சி, நகராட்சிகளில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் உருவாக்கப்படும். ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருந்தாளர் மற்றும் ஒரு உதவியாளர் பணியமர்த்தப்படுவர். காலை 8 மணி முதல் மதியம் 11மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இம்மருத்துவமனைகள் செயல்படும்.
- 'உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டம் 234 தொகுதிகளிலும் விரிவுபடுத்தப்படும். மேலும், ஒவ்வொரு சட்டப்பேரவை உறுப்பினரும் தொகுதி மக்களின் தேவை அறிந்து 10 முக்கிய திட்டங்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும். அதிலுள்ள முக்கிய திட்டங்களை செயல்படுத்த முன்னுரிமை வழங்கப்படும். இதற்காக 1000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: டாக்டர் அம்பேத்கர் விருதுக்கான பரிசுத் தொகை 5 லட்சமாக உயர்வு - ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை