சென்னை:சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை, வனத்துறை அலுவலர்கள் மூன்று நாள் மாநாடு இன்றுடன் (மார்ச் 12) நிறைவுபெற்றது. மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு துறை அலுவலர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார். மாநாட்டின் இறுதி நாளான இன்று முதலமைச்சர் ஆற்றிய உரையின் சிறப்பு தொகுப்பை இங்கு காணலாம்.
'எல்லாம் என்னால்தான் என்ற எண்ணமில்லை'
"முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்திருப்பதால் எல்லாம் என்னால்தான் என்கிற எண்ணம் எனக்கு இல்லை. இனியும் இருக்காது. என்னைத் தொடர்ந்து அமைச்சர்கள் இருக்கிறார்கள், துறைகளின் செயலாளர்கள் இருக்கிறார்கள், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் ஆகிய நீங்கள் இருக்கிறீர்கள். நாம் அனைவரும் சேர்ந்ததுதான் இந்த அரசு. இத்தனை உயிர்கள் சேர்ந்துதான் நம் அரசுக்கு உயிர்கொடுத்து கொண்டு இருக்கிறோம்.
மக்கள் நம்மை நம்பி ஆட்சிப் பொறுப்பை, அதிகாரத்தை, கோட்டையை ஒப்படைத்திருக்கிறார்கள். கடைக்கோடி மனிதனின் கவலையை போக்குகின்ற அரசாக இருக்க வேண்டும்.
அரசியல் உள்நோக்கத்தோடு மத மோதல்கள்
சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். குற்றங்களோட விழுக்காட்டைக் குறைப்பது மட்டுமில்லாமல், குற்றங்களே நடக்காத சூழ்நிலையை உருவாக்க வேண்டும். படிக்காத இளைஞர்களால் மட்டுமல்ல படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் உள்ள ஒரு சிலராலும் சட்டம் ஒழுங்கு மோதல்கள் உருவாகக் கூடிய சூழ்நிலை உருவாகிறது. இதுபோன்ற, இளைஞர்களைக் கண்டறிந்து மனமாற்றம் செய்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கித் தரவேண்டும். ஆக்கப்பூர்வமான வழிகளில், விளையாட்டுப் போட்டிகளில், ஊர்க்காவல் படைகளில் என அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
மத மோதல்கள் தடுப்புபிரிவு கோவையில் இயங்குவதைப் போல சிறப்புப் பிரிவு அனைத்து மாவட்டங்களிலும் அமைய பரிசீலிக்கப்படும். ஒரு காலத்தில் மதம் என்பது, மதம் சம்பந்தப்பட்டதாக மட்டுமே இருந்தது. இப்போது அது அரசியல் நோக்கமுள்ளதாக சிலரால் மாற்றப்பட்டு விட்டது. அரசியல் உள்நோக்கத்தோடு மத மோதல்களை திட்டமிட்டு உருவாக்குகிறார்கள். இதைத் தடுத்தாக வேண்டும்.
சமூக வலைதளங்கள் மூலம் சாதி, மத மோதல்கள் - கடும் நடவடிக்கை தேவை இது நவீன தொழில்நுட்ப யுகம். இந்தத் தொழில்நுட்பத்தை நல்வழிக்கும் பயன்படுத்தலாம், தீயவைக்கும் பயன்படுத்தலாம். சமூக வலைதளங்கள் மூலம் சாதி, மத மோதல்கள் ஏற்படுத்த நினைப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாதி, மோதல்களை சட்டம் - ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் காவல்துறையினர் பார்க்க வேண்டாம். அது சமூக ஒழுக்கப் பிரச்சினையாக பார்க்க வேண்டும்.
நாகை ஆட்சியர், கண்காணிப்பாளர் கூறிய படி சுருக்குமடி வலை பிரச்சினை குறித்து அரசு அலுவலர்கள் மட்டத்தில் குழு அமைத்து முழுமையான ஆய்வு நடத்தி இதுகுறித்து தீர்வு காணப்படும்.
போக்சோ வழக்குகளில் தாமதம் கூடாது
போக்சோ வழக்குகள் பல்வேறு மாவட்டங்களில் பதிவாகியிருக்கிறது. இப்போதுதான் அதிக குற்றம் நடக்கிறது என நினைக்க வேண்டாம். இப்போது தான் துணிச்சலாக முன்வந்து புகார் கொடுக்கிறார்கள். இதற்கு உரிய நீதி கிடைக்க செய்வது உங்களின் தலையாய கடமையாகும். குறிப்பாக இத்தகைய வழக்குகளில் தாமதம் இருக்கக் கூடாது.
தொழில் நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பகுதிகளில் ரவுடிகள் அதிகம் இருப்பதாக தாம்பரம் ஆணையரும், காஞ்சிபுரம் எஸ்.பியும் கூறினார்கள். அத்தகைய இடங்களில் சட்டம் ஒழுங்கை காக்க வேண்டியது மிகமிக முக்கியம். தொழிற்சாலைகளில் பணிபுரியும் உள்ளூர் மற்றும் வெளி மாநிலத் தொழிலாளர்களின் விவரங்களை வருவாய்த் துறை, காவல்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை இணைந்து சேகரித்து வைக்க வேண்டும்.
ரவுடிகளில் வடசென்னை, மத்திய சென்னை என பிரிவினை கூடாது
அமைதியான மாவட்டத்தில் தான் நிறுவனங்கள், தொழில் தொடங்க முன்வருவார்கள். கல்குவாரி தொழிலால் ரவுடிகள் வளர மாட்டார்கள். தொழில் போட்டி காரணமாக உருவாகிறார்கள். ரவுடிகளுக்கு அலுவலர்கள் உடந்தையாக இருக்கக் கூடாது. அதேபோல் ரவுடிகளில் வடசென்னை, மத்திய சென்னை என்று பிரிவினை செய்வதும் தவறானது. ரவுடிகளை இடம், சாதி, மதம் என்று அடையாளப்படுத்தக் கூடாது/
ரவுடிகளைக் கட்டுப்படுத்த 'வெளிச்சம்’, ‘உதயம்’, ‘விடியல்’ ஆகிய திட்டங்ளை அமல்படுத்தி வருவதாக தாம்பரம் ஆணையர் கூறினார், அதனை அனைத்து மாவட்டங்களிலும் பின்பற்றுங்கள்.
சிறார் திருமணங்கள் தடுக்க வேண்டும்
சிறார் திருமணங்களை முழுமையாக தடுக்க சமூக நலத்துறையும், மாவட்ட ஆட்சியர்களும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கடலூரில் வெள்ளம் ஏற்படாத வகையில் திட்டங்கள் கொண்டு வரவேண்டும். சாலை விபத்துக்கள் குறைக்கப்பட வேண்டும். உயிரிழப்புகள் தவிர்க்கப்பட வேண்டும். இதற்கு மாவட்ட ஆட்சியர்களும், காவல் கண்காணிப்பாளர்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
பட்டாசு மற்றும் தீ விபத்துக்களை தடுப்பதிலும், அதனுடைய பாதிப்புகளைக் குறைப்பதிலும் கவனம் செலுத்த வேண்டும். போதைப் பொருள்களைக் கட்டுப்படுத்த பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் அருகே தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். NSS மற்றும் NCC மாணவர்களுடன் இணைந்து போதைப் பொருளுக்கு எதிரான செயல்பாடுகளைக் காவல்துறை மேற்கொள்ள வேண்டும்.
- சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை
- மக்களைத் தேடி மருத்துவம்
- நமக்கு நாமே
- சமத்துவபுரம்
- அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்
- அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம்
- கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்
- பாதாளச் சாக்கடைத் திட்டங்கள்
- நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம்
- கலைஞர் வீட்டுவசதித் திட்டம், ஆகிய முக்கிய திட்டங்களை நிர்வாக எல்லைக்குள் முழுமையாகவும், விரைவாகவும் செயல்படுத்த வேண்டும்.