சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்தவுடன் அவையின் கவனத்தை ஈர்த்து எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேசியபோது, "காவேரி சிறப்பு வேளாண் மண்டலமாக கடந்த 9ஆம் தேதி முதலமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பில் புதிதாக இனி ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு அனுமதி அளிக்க மாட்டோம் எனக் குறிப்பிட்டார். ஆனால், இதற்கு முன்பு அனுமதி அளித்த ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக எதுவும் அறிவிக்கவில்லை.
அதே போன்று முதலமைச்சர் அறிவித்தது தொடர்பான கடிதத்தை மத்திய அமைச்சர்களைச் சந்தித்து கடந்த 10ஆம் தேதி அமைச்சர் ஜெயக்குமார் அளித்துள்ளார். அந்தக் கடிதத்தில்கூட இதற்கு முன்பு அனுமதி அளிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக மாநிலங்களவை, மக்களவையில் திமுக எம்பிக்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆகவே, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றுவது தொடர்பாக சட்டமுன்வடிவைத் தாக்கல் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.
இதைத் தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "சேலத்தில் நடைபெற்ற விழாவில் கடந்த 9ஆம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டேன். டெல்டா பகுதிகளில் உள்ள விவசாயிகளின் கோரிக்கையை ஏற்றும், வேளாண் மக்கள் தொடர்ந்து வைத்து வந்த கோரிக்கையை ஏற்றும் தலைவாசலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண் மண்டலம் அமைக்கப்படும் என்று அறிவித்தேன். இதற்கான நல்ல அறிவிப்பு விரைவில் வரும்" என்றார்.