கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை ஒரு சில நிறுவனங்களுக்கு தளர்த்துவது குறித்து நிதித்துறை செயலர் கிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் முதலமைச்சரிடம் பரிந்துரையை சமர்ப்பிக்க உள்ளனர். இதில் எந்தெந்த நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்பது குறித்த எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.
ஏற்கனவே மத்திய அரசு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் ஒரு சில நிறுவனங்கள் இயங்க கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, 50 விழுக்காடு பணியாட்களைக் கொண்டு பணிகளை மேற்கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது. மேலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து, அந்தந்த மாநில அரசுகளே முடிவெடுக்கும் என்றும் அறிவித்தது.
கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து அறிவிப்பு வரும்வரை தற்போதைய ஊரடங்கு தடை நீடிக்கும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. கரோனா வைரஸ் பாதிப்பை மூன்று வகையான நிறங்களை வைத்து பிரிக்கின்றனர். இதில் சிவப்பு நிற மாவட்டம் கரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டமாகவும், ஆரஞ்சு நிற மாவட்டம் மிதமான பாதிப்பு மாவட்டமாகவும், பச்சை நிற மாவட்டம் மிகவும் குறைந்த பாதித்த மாவட்டமாகவும் பிரிக்கப்பட்டுள்ளன.