தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் ஒருவாரம் ஊரடங்கு நீட்டிப்பு - TN CM order to extend curfew for one more week

stalin
stalin

By

Published : May 28, 2021, 6:04 PM IST

Updated : May 28, 2021, 7:56 PM IST

18:03 May 28

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வாரம் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அதன்படி தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு வரும் ஜூன் 7ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.  

இந்த ஊரடங்கில் நடமாடும் காய்கறி மற்றும் பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்ந்து நடைபெறும். 

நடமாடும் மளிகைக் கடை

மேலும் மளிகைப் பொருட்களை அந்தந்த பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணிமுதல் மாலை 6 மணி வரை அனுமதிக்கப்படுகிறது. 

13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக்கடைகள் மூலம் வரும் ஜுன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது. 

ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பு

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(மே 28) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாட்டில் 25-3-2020 முதல் தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின்கீழ், ஊரடங்கு உத்தரவு குறிப்பிட்ட சில தளர்வுகளுடன் அமலில் இருந்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 22-5-2021 அன்று அனைத்து சட்டப்பேரவை கட்சித் தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், சட்டப்பேரவை கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும், முன்னதாக மருத்துவ வல்லுநர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கேட்டறிந்தும் ஆலோசனை மற்றும் கருத்துகளைப் பரிசீலித்தும், கரோனா பெருந்தொற்று நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த, கடந்த 24-5-2021 முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் 7 நாட்கள் ஊரடங்கு:

இந்த ஊரடங்கு வரும் 31-5-2021அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 7-6-2021 காலை 6 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

'நடமாடும் மளிகை கடைகளுக்கு அனுமதி'

எனினும், பொதுமக்கள் அத்தியாவசிய அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறையில் இருந்துவரும் நடமாடும் காய்கறி / பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து நடைபெறும். மேலும், மளிகைப் பொருட்களை அந்தந்தப் பகுதிகளில் உள்ள மளிகைக் கடைகளால் வாகனங்கள் அல்லது தள்ளுவண்டிகள் மூலம் உள்ளாட்சி அமைப்புகளின் அனுமதியுடன், குடியிருப்புப் பகுதிகளுக்குச் சென்று விற்பனை செய்யவும், ஆன்லைன் மற்றும் தொலைபேசி வாயிலாக வாடிக்கையாளர் கோரும் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்கவும் காலை 7 மணி முதல் மாலை 6 மணிவரை அனுமதிக்கப்படுகிறது.

'விரைவில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு மளிகைப் பொருட்கள்'

இது தவிர, பொது மக்களின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், 13 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம், வரும் ஜூன் மாதம் முதல் வழங்கிட, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.

'வீட்டைவிட்டு வெளியில் வராதீர்கள்'

கரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்களின் நலன் கருதி தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும் கூட்டங்களையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், கரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைப்பிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு/ கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றைக் கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை / சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன். மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்" என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Last Updated : May 28, 2021, 7:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details