முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (பிப்.23) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் 6 கோடியே 48 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்துவைத்தார்.
மேலும், விருதுநகர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் 30 கோடியே 13 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலக வளாகக் கட்டடம் மற்றும் 11 பாலங்கள் ஆகியவற்றையும் திறந்துவைத்தார்.
36 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் வேதாரண்யம், கரியாப்பட்டினம், நாகக்குடையான், பஞ்சநதிக்குளம் ஆகிய ஊராட்சிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டடங்கள் மற்றும் பாலங்களை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்துவைத்தார்.
சுய உதவிக் குழுக்களுக்கிடையே சிறந்த நிர்வாகம் மற்றும் சமூக விழிப்புணர்வை ஊக்குவிப்பதற்காக மாநில, மாவட்ட மற்றும் வட்டார அளவில் சிறப்பாக செயல்படும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகள் மற்றும் சுய உதவிக் குழுக்களுக்கு விருதுகள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. மாநில அளவில் சிறந்த சுய உதவிக் குழுக்களுக்கான விருதுடன் தலா 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழும், சிறந்த ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு விருதுடன் தலா 3 லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழும் வழங்கப்படும்.
அந்த வகையில், 2013-14 முதல் 2016-17ஆம் ஆண்டுகளுக்கான மாநில அளவிலான சிறந்த சுய உதவிக் குழுக்கள் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கான விருதுகளை 8 சுய உதவிக் குழுக்கள் மற்றும் 4 ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.