சென்னை: கடந்த 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தின்போது பில்கிஸ் பானுவை கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்து, அவரது குடும்பத்தினர் கொலை செய்யப்பட்ட வழக்கில், 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. குற்றம் சாட்டப்பட்ட 11 பேரையும் குஜராத் மாநில உயர் நீதிமன்றம் முன்விடுதலை செய்தது. இதனிடையே, நேற்று (ஜன.08) குஜராத் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, 2008ஆம் ஆண்டு சிபிஐ நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆயுள் தண்டனை அளித்திருந்தது. அதன் பிறகு கடந்த 2022ஆம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 11 பேரையும் நன்னடத்தை காரணமாக முன்விடுதலை அளித்தது. அதனை கண்டித்து, பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு குறித்து விசாரிக்க தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தனி அமர்வு ஒன்றினை அமைத்திருந்தார். இந்நிலையில், நேற்று (ஜன.8) பில்கிஸ் பானு வழக்கில் குஜராத் நீதிமன்றத்தின் உத்தரவை, உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு பிறப்பித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது X சமூக வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. குஜராத் மாநில பா.ஜ.க அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்ச நீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் லாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.