தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

"பெண்களுக்கு இடஒதுக்கீடு முழுமையாக கிடைத்துவிடக் கூடாது என்று பாஜக சட்டம் கொண்டு வந்திருக்கிறது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - முதலமைச்சர் முக ஸ்டாலின்

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே தேர்வு, ஒரே உணவு என்ற பெயரால் ஒற்றைக் கட்சி ஆட்சியைக் கொண்டு வரப்பார்க்கிறார் பிரதமர் நரேந்திர மோடி, எனவே வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் அனைவரும் ஒன்று சேர்ந்து பா.ஜ.க.வை முற்றிலுமாக தோற்கடிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 14, 2023, 10:52 PM IST

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திமுக மகளிரணி சார்பில் நடத்திய "மகளிர் உரிமை மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், "காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இருக்கும் பெரும்பாலான மாநிலத்தைச் சேர்ந்த பெண் தலைவர்களை அழைத்து வந்து, ஏற்றத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மாநாடு, தமிழ்நாட்டுப் பெண்கள் மாநாடாக மட்டுமல்ல - இந்தியப் பெண்களின் மாநாடாக அமைந்துள்ளது என்பதை நான் பெருமையோடு பதிவு செய்து கொள்ள விரும்புகிறேன்.

இதுவரை 'சென்னை சங்கமம்' நடத்திக் காட்டிய தங்கை கனிமொழி , இப்போது இந்தியச் சங்கமத்தை நடத்திக் காட்டி இருக்கிறார். இவை அனைத்துக்கும் மகுடம் வைப்பது போல அன்னை சோனியா காந்தி அவர்கள் வருகை தந்துள்ளார்கள். கலைஞர் நம்மை விட்டுப் பிரிந்து, அவர் ஓய்விடத்துக்குச் சென்றபோது, அன்னை சோனியா காந்தி எனக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

“For me, Kalaignar’s loss is very personal. He always showed me great kindness and consideration, which I can never forget. He was like a father figure to me.” என்று. அத்தகைய ஆழமான குடும்பப் பாச நட்பைக் கொண்டவர் அன்னை சோனியா காந்தி அவர்கள். அவரும் இளம் அரசியல் ஆளுமையாக மிளிரும் அருமைச் சகோதரி பிரியங்கா காந்தி அவர்களும் இங்கு வந்திருப்பது நமக்கெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

தன்னிகரில்லா மெஹபூபா முப்தி அவர்கள் ஒரு மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர். சுப்ரியா சுலே எழுந்தாலே நாடாளுமன்றத்தில் பாஜகவினர் அஞ்சி நடுங்குவார்கள். பீகாரில் இருந்து அருமை நண்பர் நிதிஷ்குமாரின் குரலை எதிரொலிக்க லெஷி சிங், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் எண்ணத்தைச் சொல்வதற்கு டெல்லி சட்டப்பேரவை துணைத் தலைவர் ராக்கி பிட்லன்.

சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும் அருமை நண்பர் அகிலேஷ் யாதவ் அவர்களது மனைவியுமான டிம்பிள் யாதவ் மற்றும் அக்கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் ஜூஹி சிங். மேற்கு வங்கப் பெண் சிங்கம் மம்தா பானர்ஜியின் பிரதிநிதியாக சுஷ்மிதா தேவ், இடதுசாரி இயக்கங்களின் பிரதிநிதியாக சுபாஷினி அலியும், ஆனி ராஜாவும் இடம்பெற்றுள்ளார்கள். எனவே தான் இந்த மேடையே இந்தியா கூட்டணியாக காட்சியளிக்கிறது.

மேடையில் இருக்கும் தலைவர்கள் அனைவருக்கும் நான் வேண்டுகோள் வைக்க விரும்புகிறேன். பாஜகவை ஒற்றுமையின் மூலமாக மட்டுமே வீழ்த்த முடியும். தமிழ்நாடு இதை 2019ஆம் ஆண்டு தேர்தல் முதலே நிரூபித்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ளது போல ஒன்றுபட்ட கூட்டணி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் அமைக்கப்பட வேண்டும்.

பா.ஜ.க.வை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் நம்மிடையேயான சிறிய வேறுபாடுகளை மறந்து ஒன்றுபட்டு நின்றால், நம்மால் நிச்சயம் இந்திய மக்களுக்கு எதிரான சக்தியான பா.ஜ.க.வை வீழ்த்த முடியும். இங்கே வருகை தந்துள்ள சகோதரிகள் இந்தச் செய்தியை உங்கள் கட்சித் தலைவர்களிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், " ஒரே நாடு - ஒரே மொழி - ஒரே மதம் - ஒரே பண்பாடு - ஒரே தேர்தல் - ஒரே தேர்வு - ஒரே உணவு என்ற பெயரால் ஒற்றைக் கட்சி ஆட்சியைக் கொண்டு வரப்பார்க்கிறார் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள். அது நடந்தால், ஒரே மனிதர் என்ற எதேச்சாதிகாரத்துக்கு அது வழிவகுக்கும். எனவேதான் வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை முற்றிலுமாகத் தோல்வி அடையச் செய்ய வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் பெண்களை ஏமாற்ற, மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு என்று சட்டம் கொண்டு ஏமாற்றுகிறார்கள். 33 விழுக்காடு இடஒதுக்கீடு பெண்களுக்குக் கிடைத்துவிடக் கூடாது என்ற சதி எண்ணத்தோடுதான் இந்தச் சட்டத்தையே பா.ஜ.க. கொண்டு வந்திருக்கிறது.

நடைபெற இருக்கும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலில், பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று இந்த சட்டம் சொல்லி இருந்தால், பிரதமர் நரேந்திர மோடி அவர்களை நாமெல்லாம் பாராட்டலாம். பழைய படங்களில் "என் கையில் உள்ளதை நான் தரவேண்டுமானால், ஏழு மலையைச் சுற்றி வா! ஏழு கடலைச் சுற்றி வா!" என்று பூதம் சொல்வதாகக் கதை சொல்வார்கள் அல்லவா? அது போன்ற கப்சா சட்டத்தை மோடி நிறைவேற்றி விட்டு, பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு கொடுத்துவிட்டதாக பிரதமர் சொல்லிக் கொள்கிறார்.

2029ஆம் ஆண்டுதான் இந்த இடஒதுக்கீடு கிடைக்கும் என்றும், 2034ஆம் ஆண்டு கூட ஆகலாம் என்றும் கணக்கிட்டுச் சொல்கிறார்கள். எதுவாக இருந்தாலும் 2024ஆம் ஆண்டுக்குப் பிறகு மோடி ஆட்சியில் இருக்கப் போவதில்லை என்ற முடிவுக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.

மகளிர் எந்த உரிமைகளையும் பெற்றுவிடக் கூடாது, வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டும் என்று நினைக்கும் கட்சிதான் பா.ஜ.க. அன்னை சோனியா காந்தியிம் பிரியங்கா காந்தியும் இந்த மேடையில் இருப்பதால் இங்கு ஒரு விஷயத்தை நினைவுகூருகிறேன். அவர் பேசுகிறபோது சொன்னார், பிரதமர் ராஜீவ் காந்திதான், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முதன்முதலாக உறுதி செய்தார்.

அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை முதன்முதலாக 1996ஆம் ஆண்டு வழங்கியவர் கலைஞர் கருனாநிதி. இப்போது உள்ளாட்சியில் 50 விழுக்காட்டில் பெண்கள் பொறுப்பில் இருக்கிறார்கள். பா.ஜ.க. கொண்டு வந்த சட்டத்தில், இன்னொரு முக்கியமான விஷயம், இதர பிற்படுத்தப்பட்ட பெண்களுக்கும் - சிறுபான்மையின பெண்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கவில்லை.

அப்படி வழங்கினால்தான் ஏழை எளிய, விளிம்பு நிலை மக்களின் குரல் சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் ஒலிக்கும். அப்படி ஒலித்துவிடக் கூடாது என்று பா.ஜ.க. நினைக்கிறது. இதை பா.ஜ.க.வின் அரசியல் தந்திரமாக மட்டுமல்ல, அரசியல் சதியாகவும்தான் பார்க்க வேண்டியுள்ளது.

இதனை நாம் சுட்டிக் காட்டினால், ஒரு அரிய கருத்தைப் பிரதமர் அள்ளி விடுகிறார். அதாவது, பெண்களை சாதிரீதியாகப் பிளவுபடுத்தப் பார்க்கிறோமாம். சாதிரீதியாக, மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்துவது யார் என அனைவருக்கும் தெரியும். இடஒதுக்கீடு நாம் கேட்கிறோம் என்றால், சாதிரீதியாகப் பிரிப்பதற்காகவா கேட்கிறோம் என்பதல்ல. அனைத்து மகளிரும் எல்லாவித உரிமைகளும் பெற்றவர்களாக உயர வேண்டும் என்பதற்காகத்தான்.

இதை விட்டுக் கொடுத்துவிட்டால், அடுத்தடுத்து சமூகநீதியைக் காவு வாங்கி விடுவார்கள். எந்தச் சூழலிலும் சமூகநீதியை நாம் விட்டுக் கொடுத்துவிடக் கூடாது. இதுதான் நமக்கு இருக்க வேண்டிய உறுதி. ராகுல் காந்தி அவர்கள் சமூகநீதிக் குரலைத் தான் தொடர்ந்து எதிரொலித்து வருகிறார். "இந்தியா" கூட்டணி என்பது தேர்தல் கூட்டணியாக மட்டுமல்ல, கொள்கைக் கூட்டணியாக அமைந்துள்ளது" என்று கூறினார்.

இதையும் படிங்க: "நீங்கள் தான் என் தாய்.. நீங்கள் தான் என் சகோதரிகள்..." மகளிர் உரிமை மாநாட்டில் ஒலித்த பிரியங்கா காந்தியின் குரல்!

ABOUT THE AUTHOR

...view details