சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபல ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அந்த பேட்டியின் போது, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பெரும்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டு விட்டதாகவும், நீர் வடிந்து தேங்காமல் இருப்பதற்கு இயற்கையால் உருவான அந்த நிலத்தை முழுவதுமாக மீட்டு அரசு நடவடிக்கை எடுக்குமா, அது போல வேளச்சேரியிலும் பல இடங்கள் சதுப்புநிலமாகவே இருக்கின்றன எனவும், அவற்றையும் பாதுகாக்க அரசின் நடவடிக்கை என்னவாக இருக்கப் போகிறது என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்த அவர், "பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை முழுமையாகப் பாதுகாப்பது மிகமிக அவசியமானதாகும். தென் சென்னை பகுதிகளில் ஏற்படும் மழை வெள்ளப் பாதிப்புகளைக் குறைப்பதில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் பங்கு மிகவும் இன்றியமையாததாகும். பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றியுள்ள பகுதிகளின் பயன்பாடு குறித்து நிச்சயமாக மறு ஆய்வு செய்யப்படும். இந்த சதுப்புநிலத்தைப் பாதுகாக்கவும், விரிவுபடுத்தவும், வனத்துறை ஏற்கனவே நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதேபோல், சென்னை பெருநகரத்திற்கான மூன்றாவது முழுமைத் திட்டம் (Third Master Plan) தற்போது தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த முழுமைத் திட்டத்தில் வெள்ளத் தடுப்பிற்கான திட்டங்கள் உறுதி செய்யப்பட்டு, ஓராண்டு காலத்திற்குள் அது வெளியிடப்படும்.
இந்த மூன்றாவது முழுமைத் திட்டத்தில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் மற்றும் சென்னையில் உள்ள நீர்நிலைகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெள்ள பாதிப்புகளைக் குறைப்பதற்கான அம்சங்கள் இடம்பெறும். சென்னையையும், அதனைச் சுற்றியுள்ள நீர்நிலைகளையும், சதுப்புநிலங்களையும் மேம்படுத்தி, வெள்ள பாதிப்புகளைக் குறைத்து, ஒரு நிலைக்கத்தக்கத் திட்டமிட்ட வளர்ச்சியை மேற்கொள்வதற்கு இந்த மூன்றாவது முழுமைத் திட்டம் நிச்சயம் வழிவகுக்கும்" என்று தெரிவித்தார்.