சென்னை: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்(Jawaharlal Nehru University, New Delh), ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய் நிதி, தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகை, தமிழறிஞர்களுக்கு 'தமிழ்ச் செம்மல் விருது' (Tamil Semmal Award) மற்றும் 'சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகள்' (Best Translator Award) ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிச.21) தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் புதுதில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்க 5 கோடி ரூபாய்க்கான காசோலை வழங்கினார்.
மேலும், வாழ்ந்து கொண்டிருக்கும் மூன்று தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு நூலுரிமைத் தொகை, மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களுடைய மரபுரிமையரிடம் நூலுரிமைத்தொகை ஆகியவற்றை வழங்கினார். மேலும், 2021ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுகளை 38 தமிழறிஞர்களுக்கும், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுகளை 10 நபர்களுக்கும் வழங்கினார்.
‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை:டெல்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ‘தமிழ் இலக்கியவியல்’ என்ற தனித்துறை உருவாக்கிட 5 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு முதலமைச்சர், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சாந்திஸ்ரீ துலிப்புடி பண்டிட்டிடம் வழங்கினார்.
தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை:வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழறிஞர்களான நெல்லை செ.திவான், விடுதலை இராஜேந்திரன், நா.மம்மது ஆகியோரின் நூல்கள் அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டு, இவர்கள் ஒவ்வொருவருக்கும் 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சர் வழங்கினார். மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டு அவர்களுடைய மரபுரிமையரிடம் நூலுரிமைத் தொகை வழங்கப்பட்டது.
தமிழ்ச்செம்மல் விருதுகள், சிறந்த மொழிப்பெயர்ப்பாளர் விருதுகள்: 48 பேருக்கு வழங்கிய முதலமைச்சர் மறைந்த தமிழறிஞர்கள் நெல்லை கண்ணன் அவர்களின் நூல்களுக்கு 15 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், கந்தர்வன் என்கிற நாகலிங்கம் அவர்களின் நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, சோமலெ அவர்களின் நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, முனைவர் ந. இராசையா அவர்களின் நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலை, தஞ்சை பிரகாஷ் அவர்களின் நூல்களுக்கு 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை தமிழ்நாடு முதலமைச்சர், மறைந்த ஐந்து தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டதற்காக அவர்களின் மரபுரிமையாளரிடம் வழங்கினார்.
தமிழ்ச் செம்மல் விருது:2021ஆம் ஆண்டிற்கான 'தமிழ்ச் செம்மல் விருது'களை, அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சி.சிவசிதம்பரம் அவர்களுக்கும், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த பேராசிரியர் ப. வேட்டவராயன் அவர்களின் சார்பில் அவரது குடும்பத்தினரிடமும், வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ம.நாராயணன் ஆகிய 38 தமிழறிஞர்களுக்கு முதலமைச்சர் தமிழ்ச்செம்மல் விருதுடன், விருதுத்தொகையாக தலா 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி, பொன்னாடை அணிவித்து சிறப்பித்தார்.
சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது:2021ஆம் ஆண்டுக்கான 'சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருது'களை செ. சுகுமாரன், செ.இராஜேஸ்வரி, முனைவர் மு.வளர்மதி, முனைவர் இராக.விவேகானந்த கோபால், முனைவர் அ.சு. இளங்கோவன். முனைவர் வீ. சந்திரன், முனைவர் ரா.ஜமுனா கிருஷ்ணராஜ், பேராசிரியர் தமிழ்ச்செல்வி, மறைந்த ந.தாஸ், முனைவர் மா.சம்பத்குமார் அவர்களின் சார்பில் அவரது குடும்பத்தினரிடமும், தமிழ்நாடு முதலமைச்சர், சிறந்த மொழிபெயர்ப்பாளர் விருதுடன் ஒவ்வொருவருக்கும் விருதுத்தொகையாக இரண்டு லட்சம் ரூபாய்க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவற்றை வழங்கி சிறப்பு செய்தார்.
இந்நிகழ்ச்சியில் தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் மருத்துவர் இரா. செல்வராஜ், தமிழ் வளர்ச்சி இயக்குநர் முனைவர் ந. அருள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: அதிமுகவில் மீண்டும் குஸ்தி.. பாஜகவின் வியூகம் என்ன?