சென்னை:முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.05), ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஹிட்டாச்சி குழுமத்தின் துணை நிறுவனமான ஹிட்டாச்சி எனர்ஜி இந்தியா லிமிடெட் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ள உலகளாவிய தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையத்தை (Global Technology & Innovation Centre) திறந்து வைத்தார். இதன் மூலம் எரிசக்தித் துறையில் தனித்திறன் வாய்ந்த 2500க்கும் மேற்பட்ட நபர்களுக்கு உயர்தர வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசின் செய்தி அறிக்கை:இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி அறிக்கையில் கூறியது, "தமிழ்நாடு பல பொருளாதார குறியீடுகளில் அகில இந்திய அளவில் முன்னணி மாநிலமாக விளங்கி வருகிறது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், பெரும் அளவிலான முதலீடுகளை ஈர்ப்பதன் மூலம் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலை வாய்ப்புகளை உருவாக்கி, அவர்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதுடன், மாநிலத்தில் பரவலான வளர்ச்சியை உறுதி செய்திடவும் தமிழ்நாடு அரசின் தொழில் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
வணிக நடைமுறைச் சட்டம் / விதிகளில் பெருமளவிலான சீர்திருத்தங்களை மேற்கொண்டு, அனுமதிகள் பெறுவதை இலகுவாக்கியதன் விளைவாக, தொழில் செய்வதற்கு உகந்த மாநிலங்களின் தரவரிசையில், தமிழ்நாடு 14ஆம் இடத்திலிருந்து, வெகுவாக முன்னேறி தற்போது 3ஆம் இடத்தை பெற்றுள்ளது.
குறிப்பிட்ட ஒரு சில துறைகளை மட்டும் சார்ந்து இல்லாமல், பல்வேறு துறைகள் குறிப்பாக வளர்ந்துவரும் துறைகளான மின் வாகனங்கள், மின்கலன்கள், பசுமை எரிசக்தி, வான்வெளி மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் அதிக முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது.
முதலீடுகள் மேற்கொள்ளப்படுவதை ஊக்குவிப்பதற்கு, துறைவாரியாக கொள்கைகளை வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசு, உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு வசதிகள் கொண்ட தொழில் பூங்காக்களையும் (Sector Specific Policies) அமைத்து வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், "2030ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வளர்ச்சி அடைந்திட வேண்டும் என்று முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் நிர்ணயித்துள்ள இலக்கினை எய்துவதற்காக, உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் முதலீட்டாளர் மாநாடுகளை நடத்தியதன் விளைவாக, இவ்வரசு பொறுப்பேற்றது முதல் இதுநாள் வரை 4,15,282 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.2,97,196 கோடி மதிப்பிலான 241 முதலீடுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.