சென்னை:தமிழ்நாட்டில் பரவிவரும் கரோனா வைரஸ் தொற்று குறித்து, தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை சமர்ப்பித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, கிண்டியிலுள்ள ராஜ்பவனிற்கு மாலை 5 மணிக்கு வருகைப் புரிந்தார். அங்கு தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து, கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய தற்போதைய நிலை குறித்து விளக்கினார்.
அப்போது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் சண்முகம், காவல்துறைத் தலைமை இயக்குநர் திரிபாதி, மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
ஆளுநர் மாளிகைக்கு சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம், உயர்கல்வித் துறை அமைச்சர் கேபி அன்பழகன் ஆகியோரும் வருகை தந்தனர். அண்மையில் அண்ணா பல்கலைக்கழகத்தைப் பிரித்து அண்ணா பல்கலைகழகம், அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என உருவாக்குவதற்கான சட்டம் இயற்றப்பட்டது.
அதேபோன்று, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமும் இயற்றப்பட்டது. இவ்விரு சட்டங்களுக்கு ஆளுநரின் ஒப்புதல் பெறுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் ஒரு மணி நேர ஆலோசனைக்குப் பின்னர், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரோனா பாதிப்புகள் குறித்து, மாதந்தோறும் அளிக்கும் அறிக்கையை அளித்து, தற்போதைய நிலை குறித்து விளங்கியதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.