இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா தொற்றுநோய் பரவலைத் தடுப்பதற்காக அதிமுக அரசுடன் ஒத்துழைக்க திமுக தலைமையிலான காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டன. அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டி ஆலோசனைகளை பெறவேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க முதலமைச்சர் எடப்பாடி தயாராக இல்லை.
தமிழக அமைச்சரவையில் எடப்பாடி பழனிசாமியை தவிர வேறு எந்த அமைச்சரும் ஊடகங்களில் பார்க்க முடியவில்லை. தொடக்கத்தில் சுகாதார அமைச்சர் பேசிக்கொண்டிருந்தார். திடீரென அவருக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டு சுகாதாரத் துறை செயலாளர் பேச ஆரம்பித்தார். தற்போது அவரையும் காணமுடியவில்லை. அமைச்சரவை என்பது கூட்டுப்பொறுப்பு கொண்டதாகும். எல்லாமே நான் தான் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருவதை எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த நிலையில் சேலத்தில் முதலமைச்சர் ஆற்றியிருக்கிற உரை எதேச்சாதிகாரத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்றிருக்கிறது. அந்த உரையில், "அனைத்துக் கட்சிக் கூட்டத்தை எதற்காக கூட்டவேண்டிம்? இவர்களிடம் ஆலோசனை பெறுவதற்கு இவர்கள் என்ன மருத்துவர்களா? தங்களை முன்னிலைப்படுத்திக்கொள்வதற்காக அதிமுக ஆட்சி மீது நாள்தோறும் குற்றம் குறை கூறி வருகிறார்கள்" என்று ஆத்திரம் பொங்க கொட்டித்தீர்த்திருக்கிறார்.
நிதி ஒதுக்கீடு செய்வதிலும், சோதனைக் கருவிகள் வழங்குவதிலும் மத்திய பாஜக அரசு தமிழகத்தை வஞ்சித்து பாரபட்சமாக நடத்துவதை தட்டிக்கேட்க எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் துணிவில்லை? மடியில் கனமிருக்கும் எடப்பாடி அரசால் பிரதமர் மோடியை எதிர்த்து எப்படி உரிமைக்குரல் எழுப்ப முடியும்? ஆனால் பிரதமர் மோடியின் பாரபட்ச போக்கை மக்கள் மன்றத்தில் தோலுரித்து காட்டுவது தமிழக எதிர்க்கட்சிகளின் கடமையாகும்" எனத் தெரிவித்துள்ளார்.