சென்னை: காரைக்குடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள நினைவு பரிசு விற்பனையகத்தை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் இன்று (ஆக.30) திறந்து வைத்தார்.
ஒருங்கிணைந்த கைத்தறி வளர்ச்சி குழுமத் திட்டத்தின் கீழ் , விருதுநகர் மாபெரும் கைத்தறிக் குழும திட்டத்தின் வாயிலாகச் சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் ரூ.1 கோடியே 83 இலட்சம் மதிப்பீட்டில் நினைவுப்பரிசு விற்பனையகம் (Souvenir Shop) கட்டப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விற்பனையகம் 5, 500 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இதன் தரை தளத்தில், பட்டு ரகங்களுக்கு 4 விற்பனையகங்களும், பருத்தி ரகங்களுக்கு 3 விற்பனையகங்களும், முதல் தளத்தில், பருத்தி ரகங்களுக்கு 6 விற்பனையகங்களும், மீதமுள்ள ஒரு விற்பனையகம், கைவினை பொருள்களை காட்சிப்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ளன.
வெளிப்புறத்தில் சிற்றுண்டி சாலை, சிறுவர்களுக்கான விளையாட்டுப் பூங்கா ஆகியவை வாடிக்கையாளர்கள் மற்றும் நெசவாளர்களைக் கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன.
ஆண்டொன்றுக்கு ரூ.2 கோடி விற்பனை
விருதுநகர் கைத்தறி குழுமம் அமைந்துள்ள சரகங்களில் உற்பத்தி செய்யப்படும் பிரசித்திப் பெற்ற முக்கிய ரகங்களான அருப்புக்கோட்டை காட்டன் சேலைகள், மதுரை சுங்குடிச் சேலைகள், பரமக்குடி சேலைகள், செட்டிநாடு காட்டன் சேலைகள் திருப்புவனம் மற்றும் காஞ்சிபுரம் பட்டுச் சேலைகள், தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் இதர ரகங்களும் இந்த விற்பனையகத்தில் விற்பனை செய்யப்படும்.
இவ்விற்பனையகத்தில் தமிழ்நாட்டிலுள்ள 68 நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் பங்கு பெறும். இந்த விற்பனையகத்தின் மூலமாக ஆண்டொன்றுக்கு சுமார் 2 கோடி ரூபாய் மதிப்பிலான கைத்தறித் துணி ரகங்கள் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்ந விற்பனையம் திறப்பு விழாவில், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஆர்.காந்தி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு, கைத்தறி , கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, கைத்தறி மற்றும் துணிநூல்துறை முதன்மைச் செயலாளர் / ஆணையர் டாக்டர் பீலா ராஜேஷ், அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மழைநீர் சேகரிப்பு, குடிநீர் பாதுகாப்பு வாரம்: விழிப்புணர்வு வாகனத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்