தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி தலைமைச் செயலகத்தில், ஆவின் நிறுவனத்தின் சார்பில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் ஆவின் மோர், சாக்கோ லஸ்ஸி, மேங்கோ லஸ்ஸி, நீண்ட நாள்கள் கெடாத சமன்படுத்தப்பட்ட பால் மற்றும் ஆவின் டீ மேட் பால் ஆகிய ஐந்து புதிய பொருள்களை அறிமுகம் செய்து வைத்தார்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பால் விற்பனையில் மாநிலத்தில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறது, ஆவின். மேலும், வெண்ணெய், நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் முதலான பால் பொருள்களையும் தயாரித்து ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.
அந்த வகையில், ஆவின் நிறுவனத்தின் சார்பில், கீழ்க்காணும் ஐந்து புதிய பொருட்களை முதலமைச்சர் அறிமுகம் செய்து வைத்தார்.
தற்போதைய கரோனா வைரஸ் தொற்று காலகட்டத்தில் மக்களுக்குப் பயன்படும் வகையில் இஞ்சி, எலுமிச்சை, துளசி, மிளகு, சீரகம், பெருங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி, உப்பு போன்ற நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய பொருள்களை சேர்த்து புதிய ஆவின் மோர் அறிமுகப்படுத்தப்படுகிறது.