சென்னை: திரு.வி.க நகர் ஆறாவது மண்டல அலுவலகத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மற்றும் மண்டல அளவிலான அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டத்திற்குப்பிறகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "பெரிய பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிற திரு.வி.க. மண்டலத்திற்கு உட்பட்ட 15 வார்டுகளில் மழை நீர் வடிகால் தொடர்பாக தற்போது மேற்கொண்டு வருகிற பணிகளையும், இனி மேற்கொள்ள இருக்கிற பணிகளையும் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
ஏற்கெனவே உட்புறப்பகுதிகளில் தேங்கி இருந்த தண்ணீர் 95 விழுக்காடு வெளியேற்றப்பட்டுள்ளது. மழை நீர் தேங்கிய இடங்களில் கழிவுகளை சுத்தம் செய்து சுகாதாரப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த ஆட்சியின் நிர்வாகச்சீர்கேட்டின் காரணமாக மாம்பலம் பகுதியில் தண்ணீர் நின்றது. ஆனால், இப்போது மேற்கொள்ளப்பட்ட மழை நீர் வடிகாலால், மழை நீர் அப்பகுதியில் கொஞ்சம் கூட தேங்கவில்லை. வட சென்னையில் தாழ்வானப்பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தது. அவை எல்லாம் தற்போது 95 விழுக்காடு அகற்றப்பட்டுவிட்டது.
கடந்த ஆண்டு பெய்த மழையைவிட அதிகமாக, இந்த ஆண்டு திரு.வி.க நகரில் மழைபெய்தும் திரு.வி.க. நகர் மண்டலப்பகுதிகளில், மழை நீர் மிக குறைந்த அளவே தேங்கியுள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 20 விழுக்காடுகூட இந்தப்பகுதியில் தண்ணீர் தேங்கவில்லை. பட்டாளம் பகுதியில் தண்ணீர் தேங்காமல் இருக்க, நிரந்தரத்தீர்வு காண நடவடிக்கை எடுத்து வருகிறோம். அடுத்த ஆண்டு மழைக்கு இந்தப்பகுதியில் மழை நீர் தேங்காமல் நிரந்தரத் தீர்வு காணப்படும்.
பெருமழைப்பாதிப்பு என்று சொல்லும் எடப்பாடி பழனிசாமி இந்த 3 நாட்களில் மக்களைக் காண வரேவே இல்லை. எங்காவது மக்களைக் கண்டு நிவாரணங்களை வழங்க வந்தாரா? கடந்த ஆட்சியில் 10 ஆண்டுகளில் செய்த பணிகளை முதலமைச்சர் ஒன்றரை ஆண்டுகளில் செய்து முடித்திருக்கிறார். மத்திய அரசுக்கு பயந்து ஆட்சி செய்து விட்டு, மக்களுக்கு ஒரு திட்டம் கூட உருப்படியாக செய்யவில்லை.
1000 கோடி ரூபாய் செலவிட்டு திட்டங்களை சிறப்பாக செய்துள்ளோம் எனவும்; சென்னையில் ஒரு இடத்தில் கூட மழை நிற்காது என்றும் கூறினார், எடப்பாடி பழனிசாமி. ஆனால், நிலைமை என்ன ஆனது என்று நாம் கடந்த மழையில் பார்த்தோம். கடந்த ஆட்சி பத்து ஆண்டுகளில் செய்யாததை தற்போது முதலமைச்சர் 1.5 ஆண்டுகளில் செய்துள்ளார். அடுத்த பருவமழைக்கு சென்னையில் எங்கும் தண்ணீர் நிற்காத சூழல் இருக்கும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:நியாய விலைக்கடைகளின் செயல்பாடுகளை நேரடியாக கண்காணிக்க செயலி அறிமுகம்!