இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கல்விச் செல்வம் காலத்தால் அழியாதது. அந்தச் செல்வம் நாட்டிலே, பாறைக்கடியிலேயே சுரங்கத்திலிருக்கும் தங்கக் கட்டிகளாக இருக்கக்கூடாது. அதை எடுத்துப் பயன்படுத்திப் பளபளப்புள்ள, நல்ல ஒளியுள்ள தங்கமாக ஆக்கவேண்டும்' என்றார் பேரறிஞர் அண்ணா. எனது தலைமையிலான அரசு, பேரறிஞர் அண்ணா அவர்களின் அமுதமொழிக்கு செயல்வடிவம் கொடுக்கும் பணியினை அர்ப்பணிப்போடு செய்து வருகின்றது.
"எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்" என்பதை தாரக மந்திரமாக கொண்ட மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் வழிகாட்டுதலின்படி, நான் 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ஆம் நாள், கல்வித் தொலைக்காட்சி வாயிலாக கற்றல்-கற்பித்தல் என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தேன்.
இதனைத் தொடர்ந்து, 2019-2020ஆம் கல்வியாண்டின் இறுதிவரை, அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் சார்ந்த பகுதிகள் குறைவான கால அளவில் காணொலிப் பதிவுகளாக எடுக்கப்பட்டு, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி வாயிலாக ஒளிபரப்பப்பட்டு வந்தது.
இந்தச் சூழ்நிலையில், கோவிட்-19 என்னும் கொடும் தொற்றுநோய் உலகத்தையே முடக்கிப் போட்டதன் காரணமாக, மாணவர்கள் தங்கள் கற்றலை இல்லங்களிலிருந்தே தங்கு தடையின்றி பெறும் வகையில், கல்வித் தொலைக்காட்சி மாற்றி அமைக்கப்பட்டு, பள்ளிகளுக்கான பாட அட்டவணைப் போன்று, கல்வித் தொலைக்காட்சிக்கான ஒளிபரப்பு அட்டவணை, வகுப்பு வாரியாக, பாட வாரியாக, வார நாட்களுக்கு தயாரிக்கப்பட்டு இரண்டாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையில், காணொலிப் பாடப்பதிவுகள் தமிழ்நாட்டில் உள்ள ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டது. இவ்வகையில் தயாரிக்கப்பட்ட அனைத்து வீடியோ பாடப் பகுதிகளிலும் QR Code - விரைவுக்குறியீடு உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.
1 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பு, பள்ளிகளில் மாணவர் சேர்க்கை முடிந்தவுடன் ஆரம்பமாகும்.
12ஆம் வகுப்பு பாடங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாடு அரசால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள விலையில்லா மடிக்கணினிகளில் 2,939 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள Hi Tech ஆய்வகங்கள் வாயிலாக பாடங்கள் பதிவேற்றம் செய்து வழங்கப்பட்டுள்ளது.