நவம்பர் 1ஆம் தேதி இனி 'தமிழ்நாடு நாள்' கொண்டாடப்படும் - முதலமைச்சர் அறிவிப்பு - TN CM Hoisted National flag
சென்னை: தமிழ்நாடு மாநிலம் பிரிக்கப்பட்டதன் நினைவாக, இனி ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி தமிழ்நாடு நாள் கொண்டாடப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.

edappadi
73ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்ட அவர், சுதந்திர தின உரையாற்றினார். உரையில் அவர் குறிப்பிட்ட சிறப்பம்சங்கள்:
- அமைதி, வளம், வளர்ச்சி என்ற அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டுவருகிறது. தமிழ்நாட்டுக்கு நன்மைத் தரக்கூடிய திட்டங்களை மட்டுமே அரசு செயல்படுத்துகிறது.
- இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை திணிக்கக் கூடாது. இருமொழிக் கொள்கையில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. மக்களைப் பாதிக்கக்கூடிய எந்தத் திட்டமாக இருந்தாலும், அதனை அரசு எதிர்த்து மக்கள் நலனைப் பாதுகாக்கும்.
- விநியோகத் தொடர் மேலாண்மைத் திட்டமானது மேலும் ஐந்து மாவட்டங்களில் ரூபாய் நூறு கோடி மதிப்பீட்டில் விரிவாக்கம் செய்யப்படும். விரைவில் அழுகக்கூடிய வேளாண் பொருட்களை பாதுகாக்கும் வகையில் மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்படும்.
- நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டத்தை திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் என மூன்று மாவட்டங்களாக உருவாக்கப்படும். மேலும், வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தை இரண்டாகப் பிரித்து, திருவண்ணாமலை மாவட்ட பால் கூட்டுறவு உற்பத்தியாளர்கள் ஒன்றியம் உருவாக்கப்படும்.
- சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை செயல்படுத்த ரூ.40,941 கோடி மதிப்பீட்டில் அரசு நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது.
- 1956ஆம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதியில் தமிழ்நாடு மாநிலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை நினைவுகூரும் விதமாக, ஆண்டுதோறும் நவம்பர் 1ஆம் தேதி, 'தமிழ்நாடு நாள்' சிறப்பாகக் கொண்டாடப்படும்.
- தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு, நீர் மேலாண்மை இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இனிவரும் காலங்களில் பருவமழை பொய்த்தாலும், தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத நிலை ஏற்படும். இந்த இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு விரைவில் நீர்வளம் மிக்க மாநிலமாக மாறும்.
- கோதாவரி-காவிரி இணைப்புத் திட்டத்தினை விரைவாக செயல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஆற்றினை சீரமைக்க 'நடந்தாய் வாழி காவிரி' திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும், காவிரி பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வு கண்டது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். நவம்பர் 1ஆம் தேதி இனி 'தமிழ்நாடு நாள்'
Last Updated : Aug 15, 2019, 2:00 PM IST