காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தெலங்கானாவில் கொட்டிவரும் கனமழையால், மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் தத்தளித்துவருகின்றன. இதனால் தலைநகர் ஹைதராபாத் கடும் பாதிப்பைச் சந்தித்துள்ளது. மாநிலத்தில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை தற்போது 69-ஆக அதிகரித்துள்ளது.
மீட்புப் பணிகளில் ஏற்கெனவே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது ராணுவத்தினரும் களமிறங்கியுள்ளனர். மாநில அரசின் கோரிக்கையினை ஏற்ற ராணுவம், பண்ட்லகுடா பகுதியில் வெள்ள நிவாரணம், மீட்புப் பணிகளை மேற்கொண்டுவருகின்றது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவுக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், "தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களில் ஏற்பட்ட கனமழையால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மழை, வெள்ள நிவாரணப் பணிகளில் தெலுங்கானா அரசு சிறப்பாகச் செயல்பட்டு துரிதமாக நடவடிக்கை எடுத்துவருகிறது. மழை, வெள்ளத்தில் உயிரிழந்த மக்களுக்கு மாநில அரசு மற்றும் மக்கள் சார்பில் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவத் தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சார்பில் தேவையான பாய், போர்வை உள்ளிட்ட பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து தெலங்கானாவுக்கு ரூ.10 கோடி நிதியுதவி அளிக்கப்படுகிறது. மேலும், வெள்ள நிவாரணப் பணிகளில் தெலுங்கானாவுக்குத் தமிழ்நாடு அரசு துணை நிற்கும்" என்று அதில் தெரிவித்திருந்தார்.
இதையும் படிங்க:“தற்போது பள்ளிகள் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை”- அமைச்சர் செங்கோட்டையன்