இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மத்திய பாஜக அரசு இயற்றிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் பஞ்சாப் சட்டப்பேரவையில் ஏகமனதாக மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இரண்டு சட்டப்பேரவை உறுப்பினர்களைப் பெற்றிருந்த பாஜக கூட இதை எதிர்த்து வாக்களிக்கவில்லை.
மேலும் மின்சார சட்டத்தில் மத்திய அரசு மேற்கொள்ளும் திருத்தங்களிலிருந்து பாதுகாக்கும் வகையிலும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. விவசாயிகளின் நலனைக் காக்க மசோதாக்களை துணிவுடன் நிறைவேற்றிய காங்கிரஸ் முதலமைச்சர் அமரீந்தர் சிங் அவர்களை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகப் பாராட்டுகிறேன்.
பஞ்சாப் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதா மூலம் ”கோதுமை, நெல் ஆகியவற்றின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்குக் கீழ் கொள்முதல் செய்பவர்களுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கவும், வேளாண் விளைபொருள்களைப் பதுக்குபவர்களுக்கு தண்டனை விதிக்கவும்” வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை பாதுகாக்கப்பட்டுள்ளது.
இதைப் போலவே ராஜஸ்தான் அரசும் விவசாயிகள் நலனை பாதுகாக்கத் தனி சட்டம் இயற்றியுள்ளது. இதன் மூலம் மத்திய அரசின் வேளாண் சட்டங்களிலிருந்து விவசாயிகளின் நலனைப் பாதுகாக்கிற வகையில் ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு செயல்பட்டிருக்கிறது.