தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பொதுமக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு காண புதிய திட்டம் - முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை: பொதுமக்களின் குறைகளுக்கு உடனடி தீர்வு காணும் விதமாக 'முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம்' அமைக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி சட்டப்பேரவையில் அறிவித்தார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்

By

Published : Sep 15, 2020, 3:42 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டத்தொடர் இன்று (செப்டம்பர் 15) காலை தொடங்கியது. தமிழ்நாடு சட்டப்பேரவை பேரவை விதி எண். 110-ன் கீழ் தமிழ்நாடு முதலமைச்சர் பழனிசாமி, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம் என்ற புதிய திட்டம் ஒன்றை அறிவித்தார்.

தற்போது வெவ்வேறு அரசுத் துறைகள் தங்களுக்கென, தனித்தனியே துறைவாரியான மக்கள் குறைதீர்ப்பு மையங்கள் மற்றும் இணையதளங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றன. மாவட்ட அளவில் திங்கள்கிழமைதோறும் பொது மக்கள் குறைதீர்க்கும் நாள், மாதாந்திர மனுநீதி நாள், விவசாயிகள், மீனவர்கள் குறைதீர்க்கும் நாள், அம்மா திட்ட குறைதீர்க்கும் நாள், ஓய்வூதியதாரர்கள் குறைதீர்க்கும் நாள் போன்றவையும், மாநில அளவில் முதலமைச்சரின் தனிப்பிரிவு, அம்மா அழைப்பு மையம் போன்ற அமைப்புகளிலும் மனுக்கள் பெறப்பட்டு, தீர்வுகள் காணப்படுகின்றன.

இதனால், ஒருவர் பல்வேறு இடங்களில் மனுக்களை அளிக்கும் சூழல் ஏற்படுகிறது. ஒரே கோரிக்கை மனு மாவட்ட அளவிலும் மாநில அளவிலும் வழங்கப்படுவதையும் காண முடிகிறது. எனவே, தமிழ்நாடு அரசுத் துறைகளின் கீழ் செயல்படும் அனைத்து குறைதீர்ப்பு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, குறைகள் விரைந்து களையப்படுவதைக் கண்காணிக்க ஒரு சிறப்பான அமைப்பு முறை தேவைப்படுகிறது.

பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் பதிவு செய்து, அவற்றிற்குத் தீர்வு காண, ஒரு குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம் அமைப்பதன் அவசியத்தை உணர்ந்து, 'முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மைத் திட்டம்' ஒன்றை அரசு செயல்படுத்த உள்ளது.
இத்திட்டம் முதற்கட்டமாக தகவல் தொழில் நுட்பத் துறையின் மூலம் ரூ. 12.78 கோடி செலவில் நடைமுறைப்படுத்தப்படும். முதற்கட்டமாக 100 இருக்கைகள் கொண்ட உதவி மையமாக செயல்பட இருக்கும் இம்மையம், தேவைக்கேற்ப விரிவாக்கம் செய்யப்படும்.

குறைதீர்க்கும் முகாம்களிலோ இணையதளத்திலோ அல்லது அரசு அலுவலர்களோ குறைதீர்க்கும் மனுக்களைப் பெறும்போது வேலைவாய்ப்பு கோரி பெறப்படும் மனுக்களே அதிகமாக உள்ளன. இதை கருத்தில் கொண்டு, இந்த மையங்களில் பெறப்படும் அம்மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் உடனுக்குடன் பரிசீலிக்கப்பட்டு, தேவைப்படும் மனுதாரர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்பட்டு, உரிய வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இத்திட்டத்தின் மூலம் பல்வேறு அரசுத்துறைகள் தொடர்பான குறைகளை, மனுதாரர் ஒரே தளத்தில் பதிவேற்றம் செய்யலாம். இந்த மனுக்கள் 'முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை திட்டம்' மூலம் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு, விரைந்து தீர்வு காணப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details