தென்காசி மாவட்டம், ரவணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அணைக்கரை முத்து என்பவர் அவருடைய நிலத்தைச் சுற்றி உரிய அனுமதி பெறாமல் மின்வேலியை அமைத்துள்ளார். இதுகுறித்து வனத்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், இவர் விசாரணைக்காக கடந்த புதன்கிழமை அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணையின்போது, இவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், உடனடியாக அருகிலுள்ள ஆரம்பச் சுகாதார நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டு, பின்னர் மேல்சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இதையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக ஆழ்வார்குறிச்சி காவல் நிலையத்தில் குற்ற வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரம் தலைமைக் குற்றவியல் நடுவர் இதுதொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இச்சம்பவத்தை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். நீதித்துறை நடுவர் பிறப்பித்திருக்கும் உத்தரவின் அடிப்படையில், சட்டப்படியான உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
உயிரிழந்த அணைக்கரை முத்துவின் குடும்பச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அவரது குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாயும், அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப் பணி வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.