நாடு முழுவதும் கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆறு கட்டங்களாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட நிலையில், ஆறாவது கட்ட ஊரடங்கு வரும் 31ஆம் தேதியுடன் முடிவடையவுள்ளது.
அதேபோல், தமிழ்நாடு அரசு சார்பில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவானது வரும் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஊரடங்கு தளர்த்தப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாட்டில் ஊரடங்கை நீடிப்பதா அல்லது கைவிடுவதா?, அத்துடன் ஊரடங்கில் விதிக்கப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து விவாதித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு மருத்துவ நிபுணர்களுடன் முதலமைச்சர் நாளை (ஜூலை 30) ஆலோசனை நடத்தவுள்ளார். கடந்த நான்கு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும், அவ்வப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டதன் விளைவாக கடைகள், தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. தமிழ்நாடு அரசு அனுமதியுடன், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளன.
அரசு சார்பில் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், வைரஸ் பரவல் இன்னும் குறையாமல் இருக்கிறது. தொடக்கத்தில் சென்னையில் மட்டும் அதிகமாக இருந்த வைரஸ் தொற்று, பின்னர் மாநிலத்தின் பிற மாவட்டங்களிலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, ராணிப்பேட்டை, மதுரை, விருதுநகர், கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இதையடுத்து கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனால் தேவையில்லாத பயணம் தவிர்க்கப்படுவதுடன், தொற்று பரவல் கட்டுப்படுத்தப்படுகிறது.
இதையும் படிங்க: சென்னையில் 80 ஆயிரத்தைக் கடந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை