கரோனா பொது முடக்கம் காரணமாக, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து குறைந்தளவு விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வந்தன. நாள் ஒன்றுக்கு 125 விமானங்கள் புறப்பாடு, 125 விமானங்கள் வருகை வீதம் 250 விமானங்கள் மட்டுமே இயங்குவதற்கு, தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது.
கரோனா ஊரடங்கிற்கு முன்னதாக, சென்னை உள்நாட்டு விமான நிலையத்திலிருந்து நாள் ஒன்றுக்கு 392 விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. தமிழ்நாட்டில் தற்போது கரோனா வைரஸ் தாக்கம் குறைந்து ஊரடங்கும் பெருமளவு தளர்த்தப்பட்டுள்ளதால், உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துள்ளன.
ஆனால் அதற்கு தகுந்தாற் போல் உள்நாட்டு விமான சேவைகளை விமான நிலைய நிா்வாகம் அதிகரிக்க முடியவில்லை. அதற்கு தமிழ்நாடு அரசின் கட்டுப்பாடுதான் காரணமாக இருந்தது. இந்நிலையில் கூடுதல் உள்நாட்டு விமான சேவைகளை இயக்க அனுமதிக்கும்படி சென்னை விமான நிலைய இயக்குநா், தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை வைத்தாா்.
அதோடு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகமும், தமிழ்நாடு அரசிடம் கோரிக்கை விடுத்தது. இக்கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளா் ராஜீவ் ரஞ்சன் சென்னை உள்நாட்டு நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவைகளுக்கான கட்டுப்பாடுகளை முழுமையாக தளா்த்தி உத்தரவிட்டுள்ளாா்.
அதன்படி சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திலிருந்து இனிமேல் வழக்கம் போல் கட்டுப்பாடு இன்றி உள்நாட்டு விமான சேவைகள் இயக்கபடவுள்ளன. இதன் காரணமாக, சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் வழக்கம் போல் செயல்படும். ஊரடங்கிற்கு முன்பு இயக்கப்பட்ட 392 விமானங்களும், பயணிகளின் எண்ணிக்கைக்கு தகுந்தவாறு அதற்கு அதிகமாகவும் விமானங்கள் இயக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கை ஒரே நாளில் அதிகரிக்காது என்றும், படிப்படியாக அடுத்த சில தினங்களில் அதிகரிக்கப்படும் என்றும் சென்னை விமான நிலைய அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் இயங்க தொடங்கியது சென்னை விமான நிலையம்!